செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதை எங்கே, எப்படி பெறுவது? பார்க்கலாம்.

மே 16ஆம் தேதி வெளியான தேர்வு முடிவுகள்

2024- 2025ஆம் கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைப்பெற்றது. இந்தத் தேர்வை 8,71,239 மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியாகின. இதில் 8,17,261 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதாவது தேர்ச்சி விகிதம் 93.80 ஆக இருந்தது.

அதேபோல தேர்வுக்கு 15,652 மாணவர்கள் வருகை புரியவில்லை. இந்த நிலையில், தேர்வுக்கு வராத நபர்களுக்கும் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் துணைத் தேர்வு ஜூலை மாதம் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டு, மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டு முடிவுகளும் வெளியாகின.

செப்டம்பர் 3 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

இந்த நிலையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 19ஆம் தேதி முதல் வழங்கப்பட்டன. இந்த நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செப்டம்பர் 3ஆம் தேதி அன்று தொடங்குகிறது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள்‌ இயக்ககம்‌ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மார்ச், ஏப்ரல்‌- 2025 பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண்‌ சான்றிதழ்கள்‌ 03.09.2025 (புதன் கிழமை) அன்று காலை 10 மணி முதல்‌ வழங்கப்படும்‌.

மதிப்பெண் சான்றிதழைப் பெறுவது எப்படி?

பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளியிலும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும்‌ அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்களைப்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/