நீட் முதுகலைத் தேர்வை எழுத மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவை விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் அனாஸ் தன்வீர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நிலையில், நாளை (ஆக.9) இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. அருகிலேயே தேர்வு மையங்களை ஒதுக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு
நாடு முழுவதும் நீட், நெட், க்யூட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு, ஆள்மாறாட்டப் புகார்கள் வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் நெட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, மீண்டும் நடத்தப்பட்டது. நீட் இளங்கலைத் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.
இந்த நிலையில் நீட் முதுகலைத் தேர்விலும் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஏற்கெனவே நீட் முதுகலைத் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆகஸ்ட் 11ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து ஜூலை 31ஆம் தேதி தேர்வு நடைபெறும் மையங்களின் விவரங்கள் வெளியாகின. எனினும் இதில் பெரும்பாலான தேர்வர்களுக்கு தொலைதூரத்தில், வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்துத் தமிழக எம்.பி.க்கள் தரப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனால் தமிழக மாணவர்களுக்கு சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டன. எனினும் பிற மாநிலத் தேர்வர்களுக்கு, தேர்வு மையங்கள் மாற்றப்படவில்லை.
தேர்வு தேதியைத் தள்ளி வைக்க வேண்டும்
இந்த நிலையில் தேர்வு மையம் தூரமாக அமைந்திருப்பதால், மாணவர்களுக்கு சிரமமாக இருப்பதாகவும் தேர்வு மையத்தை மாற்றும் பொருட்டு, தேர்வு தேதியைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வினாத்தாள் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. எனினும் ’’அவ்வாறு முறைகேடு எதுவும் நடக்கவில்லை. வினாத் தாளே இன்னும் தயாரிக்கப் படவில்லை’’ என்று தேசிய மருத்துவ அறிவியல் வாரியம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.