ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எழுத பிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று எண்டிஏ தெரிவித்திருந்த நிலையில், அதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. 


இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. 2023ஆம் ஆண்டு ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஜூன் 4ஆம் தேதி இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் ஏப்ரல் 30 முதல் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். குறிப்பாகத்தேர்வர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்தனர்.


மே 8ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் இன்று முதல் (மே 29) நுழைவுச் சீட்டைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு தேர்வு நடைபெறும் நாளான ஜூன் 4ஆம் தேதி வரை நேரம் அளிக்கப்பட்டுள்ளது. 


இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை ஐஐடி குவாஹட்டி நடத்துகிறது. 


 75 சதவீத மதிப்பெண்


முன்னதாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத 12ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று என்டிஏ அறிவித்திருந்தது. போட்டித் தேர்வுக்கு மட்டுமல்லாமல், 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மாற்ற கொண்டு வரப்பட்டது. 


எனினும் இதை எதிர்த்து மாணவர்கள் சிலர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜே.இ.இ. மெயின் தேர்வில் நன்றாக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 12ஆம் வகுப்பு மதிப்பெண்களால் குறிப்பிட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்று மாணவர்கள் தெரிவித்திருந்தனர். 


எனினும் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து நீதிபதி துலியா கூறும்போது, ’’இதுகுறித்து நிபுணர்களிடையே கலந்து ஆலோசிக்க வேண்டியது முக்கியம்’’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.


தகுதி நீக்கம்


அண்மையில், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியை என்டிஏ நீக்கியது. ’’முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெறாத மாணவர்கள், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி மாணவர்கள் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்’’ என்றும் என்டிஏ அறிவித்துள்ளது. இதன்மூலம் 12ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்களைப் பெறாத மெரிட் மாணவர்கள், ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.