கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குளு குளு அறையில் குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு தொடக்கம் ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு: பெண்களுக்கு அழகு கலை மற்றும் யோகா பயிற்சி வகுப்புகளும் இந்த ஆண்டு அறிமுகம்.
கோடைகால பயிற்சி முகாம்கள்
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நூலக இயக்ககம் மற்றும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடை கால விடுமுறை முன்னிட்டு குழந்தைகளுக்கான சிறப்பு கோடைகால பயிற்சி முகாம்கள் மே மாதம் 1ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த கோடைகால பயிற்சி முகாமில் தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக இந்த பயிற்சி கொண்டாட்டத்தில் மியூசிக்கல் தெரபி, பலூன் சிற்பங்கள் செய்தல், கீற்றுக்கலை, அபாகஸ் பயிற்சி, வேடமிட்டு கதை சொல்லுதல், பாரம்பரிய விளையாட்டு , தோல்பாவை கூத்து, கைப்பேசி புகைப்பட பயிற்சி, ஓவிய பயிற்சி, நாடகப் பயிற்சி, ஒயிலாட்ட பயிற்சி, சதுரங்க பயிற்சி என பல்வேறு பயிற்சி பட்டறைகளை நடத்திய அதற்கான சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றனர்.
நூலகத்தில் பயன்
இந்த கோடைகால கட்டணமில்லா தமிழ்நாடு அரசின் பயிற்சி பட்டறை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. குளு குளு நூலகத்தினை குழந்தைகளும் பெற்றோர்களும் குடும்பத்துடன் வந்து பெரிதும் பயனடைந்து செல்கின்றனர். குறிப்பாக முதல் நாள் நிகழ்வில் குழந்தைகளுக்கு மியூசிக்கல் தெரபி, பாட்டும் பாடமும், அபாகஸ், போட்டோஷாப் உள்ளிட்ட கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் ஆடல் பாடல் என ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். மேலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டு இதுவரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 455 ( 17,11,455 ) பேர் நூலகத்திற்கு வந்து பயன்படுத்தியுள்ளனர்.
நன்றி தெரிவித்தனர்
இது குறித்து நம் செய்தியாளிடம் பேசிய பெற்றோர்களும், குழந்தைகளும்..,” கலைஞர் நூலகத்தின் கோடைகால பயிற்சி வகுப்புகள் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. குழந்தைகள் கோடைகால விடுமுறையில் வீட்டில் டிவியையும் செல்போனையும் பார்த்து நேரத்தை போக்குவார்கள். ஆனால் இந்தப் பயிற்சி பட்டறையில் இங்கு அவர்களுக்கும் அவர்களது மனதிற்கும் உடலுக்கும் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கும் விதமாக இலவசமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது. இது மிகுந்த பயன் உள்ளது. இங்கு வரும் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக பயனுள்ள கோடை விடுமுறையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு அரசிற்கும் கலைஞர் நூலகத்திற்கு மிக்க நன்றி எனவும் தெரிவித்துக் கொண்டனர்.
இரண்டாவது ஆண்டாவதாக பயன்பெறுகின்றனர்
தொடர்ந்து நம்மிடம் பேசிய கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் சந்தானகிருஷ்ணன் பேசும்போது....”கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்க மதுரை மட்டுமல்லாது சென்னை, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பயிற்சிக்கு வந்திருக்கிறார்கள். குறிப்பாக துபாயிலிருந்தும் கூட மாணவர்கள் தற்போது இந்த கோடை கால பயிற்சியில் பங்கெடுத்துள்ளனர், என்பது சிறப்பு மிக்கது. இந்த முறை பெண்களுக்கான அழகுக்களை மற்றும் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாவதாக இந்த கோடைகால பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாமில் 300 குழந்தைகள் உட்பட மொத்தம் 6000 பேர் பயனடைந்துள்ளனர் என்றார். குளுகுளு அறையில் கோடை காலத்தினை குழந்தைகளுக்கு பயனுள்ள பயிற்சிகள் மூலம் கலைத்திறன் மிக்க கலைஞர்களாக மாற்றும் இந்த முயற்சி அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.