அரசுப் பள்ளிகளுக்கு தரமற்ற விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டதா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.


குழந்தைகள் தின விழா இன்று (நவம்பர் 14) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:


சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்


’’குழந்தைகள் தினம் மாவட்ட, வட்டார அளவில் இல்லாமல், முதல்முறையாக மாநில அளவில் நடத்தப்பட்டுள்ளது. 114 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மழை காரணமாக மழை காரணமாக பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி வேலை நாட்கள் குறைந்து, கற்றல் - கற்பித்தல் பணி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்வுக்கான பாடத் திட்டத்தை முடிக்க வேண்டி உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, தேவைப்படும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும். 


அதேபோல வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்தந்த மாவட்ட ஆட்சியரே பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறி இருந்தோம். 


நீட், ஜேஇஇ வகுப்புகளுக்கு சிறப்புப் பயிற்சி


அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வுக்கு 46,216 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதேபோல ஜேஇஇ (JEE) தேர்வுக்கு 29,279 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மொத்தம் 1,07,225 பேர் தொழில்முறை படிப்புகளுக்கு விண்ணப்பித்து , படித்து வருகின்றனர். இரண்டு தேர்வுகளையும் எழுத, 31,730 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.


அரசுப் பள்ளிகளில் தரமற்ற விளையாட்டுப் பொருட்களா?


அரசுப் பள்ளிகள் சிலவற்றில் தரமற்ற விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து முதல்வரே என்னிடம் தெரிவித்தார். இதுகுறித்து என்னுடைய சேம்பருக்கு பொருட்களை எடுத்துவந்து ஆய்வு செய்தேன். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.25 ஆயிரம் என்ற அளவில் விளையாட்டுப் பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன.


சில பள்ளிகளில் விளையாட்டுப் பொருட்கள் பயன்படுத்தப்படாமலும் இருக்கின்றன. கேட்டால் இந்த விளையாட்டுகளை எங்களின் மாணவர்கள் விளையாடுவதில்லை என்கின்றனர். இனிமேல் வட்டாரத்துக்கு ஏற்ற வகையில், மாணவர்கள் பயன்படுத்த ஏற்ற முறையில் விளையாட்டுப் பொருட்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படும். 


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 


இதையும் வாசிக்கலாம்: THE KID: அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் சிறார் திரைப்படம்.. நவம்பரில் சார்லி சாப்ளின் படம் திரையிடல்!