பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுவாகச் சந்திக்கும் மிகப்பெரிய சவால், எவ்வளவு நேரம் படித்தாலும் தேர்வு நேரத்தில் பாடங்கள் மறந்து போவதுதான். இதற்கு மாணவர்கள் சரியாகப் படிக்காதது காரணமல்ல, அவர்கள் பின்பற்றும் ரிவிஷன் முறைதான் காரணம் என்கிறது ஓர் ஆய்வு.
பாடங்களை மொட்டையாக மனப்பாடம் செய்யாமல், நீண்ட கால நினைவாற்றலில் சேமிக்க 140 ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனியில் கண்டறியப்பட்ட 'ஸ்பேஸ்டு ரெபிடிஷன்' (Spaced Repetition) என்ற உத்தி இப்போது மாணவர்களிடையே பிரபலமாகி வருகிறது.
மறதி வளைவும் ஜெர்மன் உத்தியும்
1880-களில் ஜெர்மன் உளவியலாளர் ஹெர்மன் எபிங்ஹாஸ் என்பவர் 'மறதி வளைவு' (Forgetting Curve) என்ற தத்துவத்தைக் கண்டறிந்தார். ஒரு தகவலை நாம் படித்த சில மணி நேரங்களிலேயே மூளை அதை வேகமாக மறக்கத் தொடங்கும். ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தத் தகவலை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தினால், அது மூளையில் ஆழமாகப் பதிந்துவிடும் என்பதே இந்த உத்தியின் ரகசியம்.
இந்த முறையைப் பின்பற்றுவது எப்படி?
மாணவர்கள் ஒரே நாளில் பல மணி நேரம் அமர்ந்து படிப்பதை விட, பாடங்களைச் சிறு சிறு இடைவெளிகளில் கீழ்க்கண்டவாறு திருப்புதல் செய்யலாம்.
- முதல் படி: ஒரு பாடத்தைப் படித்து முடித்த உடனேயே, அதில் உள்ள முக்கியக் குறிப்புகளைச் சொந்த நடையில் எழுதிப் பார்க்க வேண்டும்.
- இரண்டாம் நாள்: குறிப்புகளைப் பார்க்காமல், படித்தவற்றை நினைவுபடுத்திச் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
- மூன்று நாட்களுக்குப் பிறகு: மற்றவர்களுக்கு அந்தப் பாடத்தை விளக்கிச் சொல்வது அல்லது முந்தைய ஆண்டு வினாக்களுக்கு விடையளிப்பது போன்ற முறைகளைக் கையாளலாம்.
- ஒரு வாரம் கழித்து: மீண்டும் ஒருமுறை பாடத்தைத் திருப்பிப் பார்த்து, எந்தப் பகுதிகளில் இன்னும் தடுமாற்றம் இருக்கிறதோ, அதில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சமூக அறிவியல் பாடங்களுக்கு மிகச்சிறந்த வழி
உதாரணமாக, சமூக அறிவியல் பாடத்தில் 'பிரெஞ்சுப் புரட்சி' போன்ற கடினமான பாடங்களைப் படிக்கும்போது, தேதிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை முதல் நாள் படித்துவிட்டு, அதனை இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். ஒரு வாரம் கழித்து மறக்கக்கூடிய தேதிகளை மட்டும் மீண்டும் பார்த்தால் போதும். இது கடைசி நேரப் பதற்றத்தைக் குறைக்கும்.
2- 3- 5- 7 என்ற 'மேஜிக்' சூத்திரம்
தேர்வு நெருங்கும் வேளையில், இந்த உத்தியைத் தலைகீழாகப் பயன்படுத்தலாம். தேர்வுத் தேதியில் இருந்து பின்னோக்கி எண்ணி, தேர்வுக்கு முந்தைய நாள், அதற்கு இரண்டு நாட்கள் முன், அதற்கு மூன்று நாட்கள் முன் என 2-3-5-7 என்ற கால இடைவெளியில் திட்டமிட்டுப் படித்தால், எந்தப் பாடமும் மறக்காது.
குறுகிய காலத்தில் அதிகப்படியான தகவல்களை மூளைக்குள் திணிக்காமல் (Cramming), இந்த முறையான அணுகுமுறையைப் பின்பற்றினால் பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எளிதாகப் பெற முடியும்.
உழைப்பை விடத் திட்டமிடுதலே வெற்றிக்கான வழி என்பதை மறக்காதீர்கள்.
ஆல் தி பெஸ்ட்!