வெளிநாடுகளில் படிக்க வேண்டும் என்பது ஏராளமான இளைஞர்களின் கனவாக இருக்கும். அந்த வகையில், ஒரு வெளிநாட்டில் கல்வியை இலவசமாகக் கொடுத்து, கூடவே உதவித் தொகையையும் கொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் வழங்கி வருகிறது ஐரோப்பிய நாடான ஹங்கேரி.
ஹங்கேரி நாட்டில், ஸ்டைபென்டியம் ஹங்காரிகம் உதவித்தொகை (Stipendium Hungaricum Scholarship) என்ற பெயரில் இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்கள் உயர் கல்வியில் இலவசமாகச் சேர இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் சேரும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையோடு காப்பீட்டு உதவியும் அளிக்கப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- ஹங்கேரி நாட்டுடன் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொண்ட எந்த நாட்டு மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்திய மாணவர்களும் மத்தியக் கல்வி அமைச்சகம் மூலமாகவே பிற அமைப்புகள் மூலமாகவோ இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- குறைந்தப்பட்சம் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
உதவித் தொகையின் பயன்கள் என்னென்ன?
- கல்விக்கட்டணம் முழுமையாக ரத்து- படித்து முடிக்கும் வரை இது பொருந்தும்.
- மாதாந்திர உதவித்தொகை (இந்திய மதிப்பில் சுமார் 22 ஆயிரம் ரூபாய்)
- சுகாதாரக் காப்பீடு
விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்கள் https://stipendiumhungaricum.hu/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
இத்துடன் ஊக்கக் கடிதம், கல்விச் சான்றுகள், ஆங்கில மொழிப் புலமைக்கான சான்று மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை முக்கியம். கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த நாட்டில் தங்களை ஹங்கேரிக்கு அனுப்பும் அமைப்பிடம் பதிவு செய்ய வேண்டும்.
எந்தெந்த பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தும்?
ஹங்கேரிய நாட்டில் உள்ள 30 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் பல்வேறு துறைகளில் உள்ள படிப்புகளை இந்த உதவித் தொகையுடன் படிக்கலாம்.
எனினும் விரிவான வழிகாட்டுதல்கள், காலக்கெடு மற்றும் தகுதி அளவுகோல்களுக்கு, மாணவர்கள் அந்தந்த அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்க வேண்டியது முக்கியம் ஆகும். இதுகுறித்த வழிகாட்டுதல் அடங்கிய குறிப்பேட்டை https://stipendiumhungaricum.hu/documents/stipendium_hungaricum/2025-2026/Application_Guide_2025_26.pdf என்ற இணைப்பில் காணலாம்.
----
வெளிநாட்டில் உயர் கல்வியில் சேரலாமா?
கண்டிப்பாக சேரலாம். ஆனால் நிதிநிலையையும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் உண்மைத் தன்மையையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
எல்லா வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களிலும் உதவித்தொகை உண்டா?
பெரும்பாலான வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. எனினும் அதன் சதவீதம் மாறும்.