செங்கல்பட்டு: மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
"செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை பெற அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்"

செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை பெற அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சினேகா தகவல் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வருடாந்திர உதவித்தொகை
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை 1-5 ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.2000-ம், 6-8ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.6000-ம், 9-12ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.8000-ம், பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.12,000-ம், தொழிற்கல்வி மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ. 14000-ம் வருடாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், வாசிப்பாளர் உதவித்தொகை 9-12ம் வகுப்பு பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.3000-ம், இளங்கலைப் பட்டம் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.5000-ம், தொழிற்கல்வி மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.6000-ம் வாசிப்பாளருக்கு வழங்கப்படும்.
இ-சேவை மையம் - கல்விச்சான்று தேவை
இவ்வுதவித்தொகை பெற அரசு இ-சேவை மையங்களில் மாற்றுத்திறன் தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள (UDID CARD) மருத்துவச் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் -1, கல்வி பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடமிருந்து பெறப்படும் 2025-2026-ம் நிதியாண்டிற்கான கல்விச்சான்று (BONAFIDE CERTIFICATE) போன்றவற்றை அரசு இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்து உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் D. சினேகா தெரிவித்துள்ளார்.





















