போட்டித் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதன் சுவடு மறைவதற்குள், தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (JSSC) மற்றும் ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) நடத்திய தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, தலைநகர் ராஞ்சியில் உள்ள மோராபாடி மைதானத்தில் அமைந்துள்ள பாபு வாடிகா முன்பு மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மட்டோ, ஞாயிற்றுக்கிழமை ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் உள்ள போராட்டத் தளத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து நடைபெறும் இந்தப் போராட்டத்தால் ராஞ்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.
மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகள் என்ன?
சிபிஐ விசாரணை: சமீபத்தில் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற JSSC CGL (ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை) தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இந்த முறைகேடுகள் குறித்து மாநில அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தேர்வு ரத்து: முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால், நடந்து முடிந்த JSSC CGL தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, புதிய தேதியை அறிவிக்க வேண்டும்.
கடுமையான நடவடிக்கை: வினாத்தாள் கசிவுக்குக் காரணமான இடைத்தரகர்கள், அதிகாரிகள் மற்றும் தேர்வு முகமைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பனி மற்றும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆதரவாகச் சில அரசியல் கட்சித் தலைவர்களும் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தீவிரமடையும் போராட்டம்
போராட்டக் களத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஜார்க்கண்ட் மாநில அரசு இதுவரை எந்த உறுதியான முடிவும் எடுக்காததால், போராட்டம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
