நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கான மாணவர்ளின் குரலாய் ஒலிப்பேன் என்று நீட் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


நீட் தேர்விலும் தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக நாடு முழுவதும் புகார் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்து வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வை ஒழித்துக் கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்தார்.


நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். நீட் மதிப்பெண் குளறுபடிகள் வெளிவருவதாக எழும் மாணவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பயனற்ற நீட் நுழைவுத் தேர்வுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி


நீட் தேர்வில் முதலிடம் பெற்ற 6 தேர்வர்கள் மற்றும் அதற்கு அடுத்தடுத்த இடங்கள் பெற்ற இருவரின் பதிவு எண்கள் அடுத்தடுத்த வரிசை எண்களில் உள்ளது. இது சந்தேகத்தைக் கிளப்பி உள்ளது. நீட் போன்ற கடினமான நுழைவுத் தேர்வு குறித்து என்னதான் விழிப்புணர்வும் பயிற்சி பெறுவதும் அதிகரித்து இருந்தாலும் 67 பேரால் முழு மதிப்பெண்களைப் பெற முடியுமா?


இந்த நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசு மாணவர்களின் குரல்களுக்கு செவிசாய்க்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி சாடியுள்ளார்.


நடைமுறையில் சாத்தியமில்லை


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’நரேந்திர மோடி அரசு இன்னும் பதவியேற்கக் கூட இல்லை. ஆனால் நீட் தேர்வு முடிவுகள் 24 லட்சம் மாணவர்கள் மற்றும் குடும்பங்களை அழிவில் தள்ளியுள்ளன. ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். நிறையப் பேர் அத்தகைய மதிப்பெண்களைப் பெற்றுள்ளனது நடைமுறையில் சாத்தியமில்லை. ஆனால் இந்த அரசு வினாத்தாள் கசிவு குறித்த சாத்தியக்கூறுகளைத் தொடர்ந்து மறுத்துக்கொண்டே இருக்கிறது.


கல்வி மாஃபியா மற்றும் அரசு இயந்திரத்துடன் கூட்டு சேர்ந்து நடத்தப்படும் இந்த வினாத்தாள் கசிவைச் சரிசெய்ய, காங்கிரஸ் வலுவான திட்டத்தை வகுத்தது.  எங்களின் தேர்தல் வாக்குறுதியில், வினாத்தாள் கசிவைச் சரிசெய்ய, சட்டம் இயற்றப்படும் என்று உறுதி கொடுத்திருந்தோம். இன்று நான் நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் ஒன்றுசொல்லிக் கொள்கிறேன்.


உங்கள் அனைவரின் குரலாக மாறுவேன்


நாடாளுமன்றத்தில், உங்கள் அனைவரின் குரலாக மாறுவேன். உங்களின் எதிர்காலம் குறித்த பிரச்சினைகளை வலிமையாக எழுப்புவேன். இந்தியா கூட்டணி மீதான நம்பிக்கையை இளைஞர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். மாணவர்களின் குரலை நசுக்க இந்தியா கூட்டணி அனுமதிக்காது’’ என்று பதிவிட்டுள்ளார்.