பள்ளிகளில் மாணவர்களின் நடத்தை விவகாரம் குறித்தும் வட மாநிலத்தவர் அளித்த போலி சான்றிதழ்கள் சர்ச்சை பற்றியும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார்.


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கிண்டியில் இன்று (ஏப்ரல் 23ஆம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:


’’மாநிலம் முழுவதும் 800 மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் மாணவர்களின் எடை, உயரம், பாடி மாஸ் இன்டெக்ஸ் ஆகியவை மட்டுமல்லாமல் உளவியல் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். அதற்கான முயற்சியையும் தொடங்கியுள்ளோம். 


வைரலாகும் மாணவர்களின் வீடியோக்கள்


கடந்த வாரம் பள்ளி மேலாண்மைக் குழுக்களைத் தொடங்கியுள்ளோம். பள்ளிகளில் மாணவர்கள் நடந்துகொள்ளும் நடத்தை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கும். 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுவில் தலைமையாசிரியர், பெற்றோர், உள்ளூர்ப் பிரதிநிதி ஆகியோர் இருப்பர். இந்தக் குழு சார்பில் கலந்துபேசி விசாரணை நடைபெறும்.


சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பள்ளிகள் அளவில் தீர்க்கக்கூடிய பிரச்சனையா அல்லது அரசுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பிரச்சனையா என்பது குறித்துக் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அதேநேரத்தில் பள்ளிக் கல்வித்துறை இந்தப் பிரச்சினையை கவனிக்காது என்று அர்த்தம் கிடையாது 


நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கேரியர் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அழுத்தத்தை அளிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன. 




பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை


கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து முதலமைச்சர் அலுவலகக் கூட்டத்தில் சொல்வதைப் பின்பற்றுவோம். பிறகு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.


ஆண்டுதோறும் 2 முதல் 3 லட்சம் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு வரும். சமீப காலங்களில் அஞ்சல் துறையில் 455 சான்றிதழ்களைச் சரிபார்க்கச் சொல்லி மத்திய அரசு வழங்கி வந்தது. இதில் 321 சான்றிதழ்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் போலிகள் அனைத்தும் பெரும்பாலும் அஞ்சல் துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 


இதைத் தவிர்க்க அந்தந்த ஆட்சியர் அலுவலகத்தில் டிஜிஇ (DGE) சரிபார்ப்பு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் படித்துள்ளாரா என்ற சரிபார்த்துக் கொள்ளலாம். வருங்காலங்களில் இந்த சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படும்’’.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண