பிறவியிலேயே 90 சதவீத முதுகுத்தண்டு தசைச் சிதைவு மற்றும் பெருமூளை வாதம் ஆகிய பாதிப்புகளைக் கொண்ட 17 வயது மாணவர் சந்தோஷ், ஐஐடி சென்னையில் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள் (Data Science and Applications) பாடப்பிரிவில் 4 ஆண்டு இளங்கலை அறிவியல் பி.எஸ். படிப்பில் சேர உள்ளார்.

Continues below advertisement

கடந்த ஆண்டு தனது பள்ளி சார்பாக சென்னை ஐஐடிக்குச் சென்ற கல்விச் சுற்றுலாவைத் தவறவிட்ட சந்தோஷ், தற்போது நுழைவுத் தேர்வில் இரண்டாவது முறையாகப் பங்கேற்று வெற்றிபெற்று அதே கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். தனது வகுப்பிலேயே ஐஐடி சென்னையில் பி.எஸ். படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெற்ற ஒரே மாணவர் இவர் மட்டுமே.

கனவுகள் எளிதான பாதையைப் பின்பற்றுவதில்லை

இது குறித்து ஐஐடி சென்னை தனது எக்ஸ் பக்கத்தில், "கனவுகள் எப்போதும் எளிதான பாதையைப் பின்பற்றுவதில்லை. ஆனால் உறுதியான விருப்பம் நீங்கள் விரும்பும் இடத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும்" எனப் பதிவிட்டுள்ளது.

Continues below advertisement

ஆட்டோ ஓட்டுநரின் மகனான சந்தோஷ், TN Volunteers என்ற தொண்டு நிறுவனம் மூலம் இந்தப் படிப்பைப் பற்றி அறிந்துகொண்டார். மேலும், பெருமளவு வீட்டிலிருந்தபடியே படிக்கும் வகையிலான இந்தத் திட்டத்தை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற முன்னெடுப்பின் கீழ், டிஎன் வாலண்டியர்ஸ் தொண்டு நிறுவனம் ஆரம்பக் கட்டங்களில் ஏஐ பயிற்சி உள்ளிட்ட நேரடி ஆதரவை அவருக்கு வழங்கும். அதோடு, அவரது முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தையும் அந்த நிறுவனமே ஏற்கிறது.

அது என்ன அனைவருக்கும் ஐஐடிஎம்?

இது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு அவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கடந்து, தரமான உயர்கல்வி மற்றும் ஸ்டெம் கல்வியை அளிப்பதற்காக சென்னை ஐஐடியால் வடிவமைக்கப்பட்ட ஒரு உள்ளடக்கிய கல்விச் செயல்திட்டமாகும்.

சந்தோஷுக்கு என்ன உடல் குறைபாடு?


முதுகுத்தண்டு தசைச் சிதைவு (SMA) என்பது மோட்டார் நியூரான்களை அழித்து, படிப்படியாகத் தசை பலவீனம் மற்றும் சிதைவுக்கு வழிவகுக்கும் ஒரு பரம்பரை மரபணு நோயாகும். அதேபோல, பெருமூளை வாதம் (Cerebral palsy) என்பது உடல் அசைவு, தசை கட்டுப்பாடு, சமநிலை மற்றும் தோரணை ஆகியவற்றை நிரந்தரமாக பாதிக்கும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு நரம்பியல் கோளாறு ஆகும்.