இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தெரிவிக்கும்போது, ’’12.11.2025 அன்று நடைபெற்ற சங்கத்தின் உணவு இடைவேளை-கவன ஈர்ப்பு கோரிக்கை முழுக்கக் கூட்டத்தில் பெருந்திரளாக பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, ஆட்சியாளர்களுக்கு 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது மற்றும் அரசுப் பணியிலுள்ள 4.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பி சமூக நீதியினைக் காப்பது, மேலும் 17.05.2023 அன்று முதலமைச்சரால் கொள்கை முடிவு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அகவிலைப் படியினை உடனடியாக வழங்குவது ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தினை அளிக்கும் விதமாக நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளோம் என்பதை அரசுக்கு சுட்டிக் காட்டியுள்ளோம்.
நம்முடைய போராட்டத்தின் காரணமாக மறுநாளே 13.11.2025 அன்று அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இது நமது போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி, நமது ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி, சங்கத்திற்குக் கிடைத்த வெற்றி.
தொடர்ச்சியான போராட்டங்கள்- உணவு இடைவேளை ஆர்ப்பாட்டங்களால்
1.1.2023 முதல் அகவிலைப்படியினை ஒன்றிய அரசு அறிவித்த அதே தேதியில் நிலுவைத் தொகையுடன் பெற்று வருகிறோம்
24.01.2025 உணவு இடைவேளை கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தின் காரணமாக காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பினை மீட்டெடுத்தோம்
2017ல் ஜாக்டோ ஜியோவுடன் இணைந்து செப்டம்பர் மாதத்தில் நாம் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் தான் நமக்கு ஏழாவது ஊதிய மாற்றத்தினைப் பெற்றுத் தந்துள்ளது.
உரிமைகளை எள்ளளவும் விட்டுக் கொடுக்கமாட்டோம்
திமுக அரசு, 4 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நிறைவேற்றாமல், குழு அமைத்தபோதும் அந்தக் குழு 30.09.2025க்குள் அறிக்கை அளிக்காமல் கால நீட்டிப்புக் கோரியுள்ளபோதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புப் பட்டை அணிந்தது தலைமைச் செயலக பணியாளர்கள்தான் என்பது, தலைமைச் செயலகப் பணியாளர்கள் தங்களது உரிமைகளை எள்ளளவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளோம்.
நமது இலக்கு என்பது ஓய்வூதியம் மட்டுமே. அகவிலைப்படி அறிவிப்பினால் ஓய்வூதியத்தினை பெறுவதில், நமது இயக்க நடவடிக்கையில், எதிர்வரும் 18.11.2025 செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திலிருந்து நாம் எள்ளளவும் பின்வாங்கப் போவதில்லை.
ஓய்வூதிய அறிவிப்பு
மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கை வரவுள்ள நிலையிலும், இன்றும் ஏறத்தாழ 100 நாட்களே எஞ்சியுள்ள சூழ்நிலையிலும், ஆட்சியாளர்கள் ஓய்வூதினை வழங்குவதில் எந்த அவசரத்தையும் காட்டுவதாகத் தெரியவில்லை.
முதலமைச்சரால் 110 விதியின்கீழ் நிர்ணயம் செய்யப்பட்ட 30.09.2025 காலக்கெடுவினைக் கடத்து 48 நாட்கள் ஆன பிறகும், மெத்தனப் போக்குடன் செயல்படும் ஓய்வூதியக் குழுவிடமிருந்து அறிக்கையினைப் பெறுவதற்கு ஆட்சியாளர்கள் குறைந்தபட்ச முனைப்புக் கூட காட்டவில்லை.
இந்த ஆண்டிலேயே ஓய்வூதியம்
ஓய்வூதியத்தினை இந்த நிதியாண்டிலேயே, அதாவது 2025-2026 நிதியாண்டிலேயே நடைமுறைப்படுத்தினால் மட்டும் தான், இந்த அரசின் மீதான நம்பகத்தன்மை-தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றுவது என்பது ஏற்படும். அப்படிப் பார்த்தால், வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள்ளாக ஓய்வூதிய தொடர்பான கொள்கை முடிவினை அறிவித்து, தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக, இதுநாள் வரை பணியிலிருந்து ஓய்வுபெற்ற / இறந்த பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் வழங்குவதை முதலமைச்சர் உத்திரவாதப்படுத்த வேண்டும்.
ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்காக எதிர்வரும் 18.11.2025 செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் தலைமைச் செயலகப் பணியாளர்கள் அனைவரும் பங்கேற்போம். ஓய்வூதியத்தினை மீட்டெடுப்போம்’’ என்று தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது.