நாடு முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கையும் அதனால் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர், தெரு நாய் அச்சுறுத்தல் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

Continues below advertisement

தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்:

  1. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும்.
  2. பள்ளியின் அறிவிப்பு பலகையில் தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்த விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
  3. தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்து விழிப்புணர்வினை காலை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
  4. தெரு நாய்க்கடிக்கு ஒரு மாணவர் உட்பட்டிருப்பின் அதை எவ்வித தயக்கமும் இன்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்க உரிய அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
  5. பள்ளியினை சுற்றியுள்ள இடங்களில் தெருநாய்கள் இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக சார்ந்த உள்ளாட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.
  6. மாணவர்கள் தெருவில் உள்ள நாய்களுடன் விளையாடுவதோ, உணவளிப்பதோ தவிர்க்கப்பட தேவையான அறிவுரைகளை வழங்குதல் வேண்டும்.
  7. ரேபிஸ் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வினை மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
  8. பள்ளித் தலைமையாசிரியர்கள் மேற்காண் வழக்கின் அறிவுரையின்படி ஒரு நோடல் அதிகாரியை (Nodal Officer) நியமித்து, வளாகத்தின் பராமரிப்பு, தூய்மை மற்றும் தெரு நாய்கள் வளாகத்திற்குள் நுழையவோ அல்லது வசிக்கவோ இயலாதவாறு மேற்பார்வையிட வேண்டும். மேற்கூறிய அதிகாரியின் விவரங்கள் அறிவிப்பு பலகையில் அனைவரும் அறியும் வண்ணம் இருத்தல் வேண்டும். மேலும் சார்ந்த அலுவலர் குறித்த விவரங்கள் சார்ந்த உள்ளாட்சி அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும்.

இப்பொருள் சார்ந்து அனைத்து பள்ளிகளிலும் தேவையான நடவடிக்கையினை உடன் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement