சம வேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் கொட்டும் மழையில்7ஆம் நாளாய் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
’பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைந்து சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும், இடையில் நிறுத்தப்பட்ட உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
எனினும் தேர்தல் நெருங்கி வரும் சூழல், போராட்டம் தீவிரமாகி உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26ஆம் தேதி முதல் தங்களது குடும்பத்தை விட்டு தலைநகர் சென்னையில் தங்கி போராடி வருகின்றனர். தொடர்ந்து 7ஆம் நாளாக இன்று (ஜனவரி 1) சென்னை, எழும்பூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி மாதம் 6-ம் தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.
என்னென்ன கோரிக்கைகள்?
சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தகுதி உயர்த்துவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும். வட்டார அளவிலான பதிவு மூப்பு பதவி உயர்வு என்று இருந்ததை மாநில அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என மாற்றியதால் அவர்களின் குடும்ப சூழல் பாதிக்கும் என்பதால் மீண்டும் வட்டார அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவையே இந்த இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளாகும்.
அதேபோல தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியில் காலியாக உள்ள 30,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அரசுத் தரப்பில் இந்த கோரிக்கைகள் செவிசாய்க்கப்படவில்லை.
தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆகின?
முன்னதாக திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.