மத்திய அரசின் துறைகளில் உள்ள கிளார்க் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பதவிகளுக்கு நடத்தப்படும் SSC CHSL 2025 தேர்வு வரும் அக்டோபரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மத்திய அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. அந்த வகையில், 12-ம் வகுப்பு தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படும் லோவர் டிவிசன் கிளார்க்/ஜூனியர் செயலக உதவியாளர் மற்றும் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிகளுக்கு ஒருங்கிணைந்த உயர்நிலை அளவு தேர்வு (CHSL) நடத்தப்படுகிறது.

2025-ம் ஆண்டில் மொத்தம் 3,131 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியாகி, ஜூலை வரை பெறப்பட்டது. இதற்கான தேர்வு செப்டம்பர் 8 முதல் 24 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வேறு தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணத்தில் நடைபெறவில்லை. தொடர்ந்து, CHSL தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் அல்லது எப்போது நடைபெறும் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால் தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

Continues below advertisement

இந்நிலையில், Phase 13 மற்றும் CGL தேர்வுகள் முடிவடைந்த நிலையில், CHSL தேர்வு எப்போது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 4ம் வாரம் முதல் CHSL தேர்வு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு தேதிகள் குறித்த முழுமையான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணையை தொடர்ந்து, தேர்வர்களுக்கு அட்மிட் கார்டு வெளியிடப்படும். https://ssc.gov.in/ என்ற இணையதளத்தில் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இத்தேர்வை தொடர்ந்து, SI CPO 2025, JE மற்றும் MTS தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC CHSL 2025 தேர்வு முறை: 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இத்தேர்வை எழுத தகுதியானவர்கள் ஆவார்கள். இத்தேர்வு இரண்டு கட்டமாக கணினி வழியில் நடத்தப்படும். முதல் கட்டத் தேர்வு ஆங்கிலம், பொது அறிவு, நுண்ணறிவு மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவற்றில் அடிப்படையில் தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகளுக்கு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

தேர்வெழுத 1 மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். இத்தேர்வு கொள்குறி வகையில் நடைபெறும். இதில் 0.50 மதிப்பெண்கள் நெகட்டிங் மார்க் உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்டத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இரண்டாம் கட்டத் தேர்வு இரண்டு பிரிவாக நடைபெறும். முதல் பிரிவு கணிதம், பொது அறிவு, ஆங்கிலம், பொது விழிப்புணர்வு, கணினி திறன் தேர்வு என நடைபெறும். தொடர்ந்து, 15 நிமிடங்கள் திறன் தேர்வு/ தட்டச்சு தேர்வு நடைபெறும். இதில் அனைத்து கட்டத்தில் தகுதி பெறும் தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்படும். அடுத்தக்கட்டமாக பணி நியமன பணிகள் மேற்கொள்ளப்படும்.