பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வையும் இனி ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வை நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்டிஇ எனப்படும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இடை நிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தனித்தனியாக டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த சட்டம் தமிழகத்தில் 2011-ல் நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்குப் பின்னர் டெட் தேர்வு இங்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது.
அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயம்
எனினும் அதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டெட் தேர்வை எழுதாமலேயே பணியில் தொடர்ந்தனர். இந்த நிலையில் அண்மையில் உச்ச நீதிமன்றம், அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயம் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதனால் தமிழ்நாட்டில் 2011-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் சுமார் 1.70 லட்சம் பேர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக அரசு ஆலோசனைக் கூட்டம்
இதுகுறித்து அண்மையில் தமிழக அரசு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்துக்கு, தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில், மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனவும், ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில் ஆண்டுக்கு 2 முறை தேர்வை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி அல்லது பிப்ரவரியில் அடுத்த தேர்வு?
அதேபோல, ‘’ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வு என 2 ஆண்டுகளில் 4 முறை டெட் தேர்வு நடத்தப்பட உள்ளது. அவற்றை ஆசிரியர்கள் எழுதி தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். நவம்பரில் டெட் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், அடுத்த டெட் தேர்வு ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது’’ என்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக சராசரியாக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.