எங்கள்‌ பள்ளி, மிளிரும்‌ பள்ளி திட்டத்தின்கீழ் ஜனவரி 8 முதல் 10 வரை சிறப்புப் பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள்‌ மேற்கொள்ள வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


அனைத்து அரசு தொடக்கப்‌ பள்ளிகள்‌, நடுநிலைப்பள்ளிகள்‌, உயர்நிலைப் பள்ளிகள்‌ மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்கள்‌ தன்சுத்தம்‌, பள்ளி வளாகத்‌ தூய்மை, பள்ளியின்‌,சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல்‌, கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல்‌, மறுசுழற்சி முறைகளின்‌ முக்கியத்துவத்தினை உணர்தல்‌, நெகிழி பயன்பாட்டைக் குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப்‌ பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும்‌ நடவடிக்கைகள்‌, பள்ளி காய்கறித்‌ தோட்டம்‌ அமைத்தல்‌ ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ நோக்கத்தில்‌ "எங்கள்‌ பள்ளி, மிளிரும்‌ பள்ளி" என்ற திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின்‌ சிறப்பு செயல்பாடாக ஜனவரி மாதத்தில்‌ 08.01.2024 முதல்‌ 10.01.2024 வரை சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள்‌ மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளி சுற்றுச்சூழல்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌


பள்ளி மேலாண்மைக்‌ குழு, பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகம்‌, முன்னாள்‌ மாணவர்கள்‌ மன்றம்‌, தன்னார்வலர்கள்‌, பள்ளி மாணவர்களின்‌ ஒருங்கிணைந்த செயல்பாடுகள்‌ மூலம்‌ எதிர்வரும்‌ 8, 9, மற்றும்‌ 10.01.2024 ஆகிய நாட்களில்‌ பள்ளி வளாகத்தில்‌ பெரிய அளவிலான தூய்மைப்‌ பணி இயக்கம்‌ செயல்படுத்திட உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.


அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:


பள்ளிச்‌ சுற்றுச்சுவர்‌ அமைந்துள்ள பகுதியில்‌ வெளிப்புறமும்‌, உட்புறமும்‌ புதர்கள்‌, தேவையற்ற செடிகளை அகற்றி தூய்மை செய்வதுடன்‌ சுற்றுச்சுவர்‌ வண்ணம்‌ பூசுதல்‌.


பள்ளி வளாகம்‌, விளையாட்டு மைதானம்‌ உள்ளிட்ட அனைத்துப்‌ பகுதிகளிலும்‌ களைச்‌ செடிகள்‌ ஏதுமிருப்பின்‌ அவற்றினை அகற்றுதல்‌, பள்ளிக்‌ கட்டிடங்களுக்கு அருகில்‌ அமைந்துள்ள மரங்களின்‌ வலுவிழந்த கிளைகள்‌,
கட்டிடம்‌ மேல்‌ படர்ந்துள்ள கிளைகளை அகற்றி அனைத்துக்‌ கட்டிடங்களின்‌ மேற்பரப்பையும்‌ தூய்மை செய்து பராமரித்தல்‌.


அனைத்து வகுப்பறைகளையும்‌ தூய்மை செய்து கரும்பலகைகளுக்கு வண்ணம்‌ பூசுதல்‌.


பழுதடைந்துள்ள மின்னிணைப்புகளை சரிசெய்து பராமரித்தல்‌. குறிப்பாக, மின்சார வாரிய மின்‌ கம்பத்திலிருந்து பள்ளிக்கு இணைக்கப்பட்டுள்ள கம்பிகள்‌ முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்து பள்ளி
வளாகத்திலுள்ள அனைத்து மின்‌ இணைப்புகளும்‌ பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்‌. வகுப்பில்‌ உள்ள மின்‌ சாதனங்கள்‌ பழுதில்லலாமல்‌ இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்‌.


ஆசிரியர்‌ ஒய்வறை, ஆய்வகம்‌ மற்றும்‌ இதர அறைகளில்‌ தேக்கமடைந்துள்ள தேவையற்ற பொருட்கள்‌ மற்றும்‌ காகிதங்களை கழிவகற்றம்‌ செய்தல்‌.


பள்ளி வளாகத்தில்‌ குப்பைகள்‌ சேராவண்ணம்‌ கழிவு மேலாண்மை திட்டம்‌ வகுத்து செயல்படுத்துதல்‌.


பள்ளி அலுவலகம்‌ மற்றும்‌ தலைமையாசிரியர்‌ அறையை முழுமையாக தூய்மை செய்தல்‌ மற்றும்‌ மின்னனு கழிவுகளை முறையாக கழிவகற்றம்‌ செய்தல்‌.


தாழ்நிலை மற்றும்‌ மேல்நிலை நீர்த்‌ தேக்கத்‌ தொட்டிகளை முறையாக தூய்மை செய்து பாதுகாப்பான முறையில்‌ மூடி பூட்டி வைத்திடவும்‌, தலைமையாசிரியர்‌ முன்னிலையில்‌ மட்டுமே சுகாதாரப்‌ பணிக்காக தூய்மை
செய்யும்‌ பொருட்டு நீர்த்‌ தேக்கத்‌ தொட்டியின்‌ பூட்டு திறக்கப்பட வேண்டும்‌. நீர்த்‌ தேக்கத்‌ தொட்டி தூய்மைப்‌ பணிகளுக்கு எக்காரணம்‌ கொண்டும்‌ மாணவர்களைப்‌ பயன்படுத்தக்‌ கூடாது.


தண்ணீர்‌த் தொட்டியினை சுத்தம்‌ செய்த விவரம்‌ அடங்கிய பதிவேட்டினை பராமரித்தல்‌, குறிப்பிட்ட கால இடைவெளியில்‌ தொடர்ந்து சுத்தம்‌ செய்வதை உறுதிபடுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.