மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சி மேற்கொள்ளும்போது வீடியோ, புகைப்படம் எடுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தொடர்புடைய அறிவுரைகளை பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:
வீடியோ, புகைப்படம் எடுக்கக் கூடாது
- மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சி மேற்கொள்ளும்போது வீடியோ, புகைப்படம் எடுக்கக் கூடாது.
- அதேபோல மாணவிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில், தொலைக்காட்சி அறை, காரிடார்களில் சிசிடிவி அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தண்ணீர் வசதியும் முறையாக செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- மாணவிகள் செல்ல வேண்டிய இடங்களில் சுத்தமான, போதிய அளவில் கழிப்பறை வசதி, உடை மாற்றும் வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
- ஆங்காங்கே முதலுதவிப் பெட்டிகள் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- மாணவிகளுக்கு சரியான ஊட்டச்சத்து பிளான் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ’
- மாணவிகள் தங்களின் குறைகளைத் தெரிவிக்கும் நிலையில், புகார் பெட்டி வைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்க
- விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு விளையாட்டு அமைப்பிலும் ஒரு பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட வேண்டும்.
- தனிப்பட்ட, ரகசியமாக புகார் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- மாணவிகள், வீராங்கனைகள் மற்றும் பெற்றோர்கள் எளிமையாகப் புகார் அளிக்க வசதிகள் செய்யப்பட அமையும்.
தாமதமின்றி விசாரணை
புகார் பெறப்படும் பட்சத்தில், தாமதமின்றி விசாரணை நடத்தி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளார்.