சிவகங்கை மாவட்டம் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 5 வயது முதல் 16 வயது வகை சிறார்களுக்கிடையே குறிப்பிட்ட 4 பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் வருகின்ற 01.03.2026 அன்று நடைபெறவுள்ளது. – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
கலை ஆர்வத்தை ஊக்கிவிக்கும் நிகழ்வு
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் சவகர் சிறுவர் மன்றம் வாயிலாக 2025-2026 ஆம் நிதியாண்டில் 5-8, 9-12, 13-16 வயது வகை சிறார்களுக்கிடையே கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 4 பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் 01.03.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
போட்டிகள்
குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் போட்டிகள் காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது. குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம் ) மலை மக்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும் ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியத்தாள்கள் மட்டுமே வழங்கப்படும்.
சிறார்கள் வாய்ப்பை பயன்படுத்தவும்
அக்ரிலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் மட்டுமே ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் வரைய அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட போட்டியில் வெற்றிபெறும் 9-12, 13-16 வயது வகை சிறார்களுக்கிடையே. முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மேலும் விவரங்களுக்கு கலை பண்பாட்டுத்துறையின் மதுரை மண்டல அலுவலகத்தின் தொலைபேசி எண் 0452-2566420 மற்றும் 97863 41558 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். இவ்வாய்ப்பினை 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறார்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
