மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்தாமல், வேறு ஒரு பள்ளிக்கு செல்லும் பட்சத்தில், நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்வது என்று திருச்சியில் நடைபெற்ற தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம் அமல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி.அரசகுமார் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
தனியார் பள்ளிகளின் பயிலும் மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்தாமலும் தான் பயின்ற பள்ளிகளில் உரிய முறையில் மாற்றுச்சான்றிதழ் பெறாமல் வேறு பள்ளிகளில் சேர்க்கை செய்வதை தடுத்து நிறுத்திட தீர்மானிக்கப்படுகிறது. இதற்கு உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என தீர்மானிக்கப்படுகிறது.
சிறப்பு வகுப்புகளைத் தொடர்ந்து நடத்த முயற்சி
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அரசு பொது தேர்வை சந்திப்பதற்கு ஏதுவாக காலம் காலமாய் பெற்றோர்களின் விருபத்திகேற்ப நடைபெற்று வரும் சிறப்பு வகுப்புகளை (SPECIAL CLASS) நடத்துவதில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றி எப்பொழுதும் போல் சிறப்பு வகுப்புகளை தொடர்ந்து நடத்த முயற்சி மேற்கொள்வதென தீர்மானிக்கப்படுகிறது.
CBSE உள்ளிட்ட பிறவாரிய பள்ளிகளுக்கு வழங்கப்படும் மூன்று ஆண்டுக்கான அங்கீகார சான்றினை சம்பந்தப்பட்ட பள்ளிகள் சம்பந்தப்பட்ட வாரியங்களால் பெறப்படுகிற தொடர் இணைப்பு ஆணைகளுக்கு ஏதுவாக (CONTINUOUS AFFILIATION) ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்வதென தீர்மானிக்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளில் பணியாற்றுகின்ற ஒரு சில நபர்களின் தவறான நடவடிக்கைகளால் POCso வழக்கு பதிவு செய்யப்படும் பட்சத்தில் ஆழ்ந்து ஆராய்ந்து விசாரணை நடத்தி அவசர கோலத்தில் வழக்கு பதிவு செய்யாமல் குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர் மீது மட்டுமே குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்வதுடன் பள்ளி தாளாளர், முதல்வர், அறக்கட்டளை அறங்காவலர் மீது நடவடிக்கை பாயாமல் பாதுகாத்திட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்படுகிறது.
கேள்வித்தாள்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கேள்வித்தாள்களுக்கான கட்டணம் செலுத்தி கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவினை மாற்றம் செய்து கடந்த காலங்களில் நடைமுறையில் உள்ளது போல அந்தந்த பள்ளிகளே தயார் செய்து கொள்ளும் கேள்வித்தாள்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டி கல்வித்துறையை கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழு பள்ளிகள் சார்பில் கொடுக்கப்படும் ஒட்டுமொத்த செலவினங்களில் சிலவற்றை ஏற்க மறுப்பதும், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதையும் கருத்தில் கொண்டு கல்வி கட்டணம் நிர்ணயத்தின் போது அனைத்து வகை செலவினங்களையும் ஏற்பதுடன் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பாதிப்பில்லாத கல்வி கட்டணத்தை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நிர்ணயம் செய்ய தீர்மானிக்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்
சமச்சீர் கல்வி முறையால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி கற்பதில் வேறுபாடுகளின்றி இருப்பதாக பெற்றோர்கள் கருதுவதால் எதிர்காலத்தில் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டும், தமிழக அரசின் உயர்கல்வி திட்டங்களில் (மருத்துவம் மற்றும் பொறியியல்) அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுவதை சுட்டிக்காட்டியும் CBSE உள்ளிட்ட பிறவாரிய பள்ளிகளுக்கு உள்ளதைப் போலவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான தனித்துவம் கொண்ட பாடத்திட்டத்தை ஏற்படுத்திட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்படுகிறது.