சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 19 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் பிடிக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார்.


திண்டுக்கல்  மாவட்டம், ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அண்மையில் ஒரு சுற்றறிக்கையைப் பகிர்ந்து இருந்தார். அதில், ’’திண்டுக்கல்  மாவட்டம், ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டம், வட மதுரை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்டு, தகவல் இன்றி பள்ளிக்கு வருகை புரியாத நாட்களை ஈட்டிய விடுப்பாக அனுமதிக்க வேண்டி கருத்துரு பெறப்பட்டது.


சம்பளமில்லாத விடுப்பாக அனுமதி


இதன்படி, மருத்துவக் காரணங்கள் தவிர பிற விடுப்புகளை அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரியில் 19-ல் இருந்து மார்ச் 8 வரையிலான நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளமில்லாத விடுப்பாக அனுமதிக்கப்படுகிறது. அதற்குரிய ஊதியம் மற்றும் பிற படிகள் ஒரே தவணையாக பிடித்தம் செய்ய வேண்டும்’’ என்று ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தெரிவித்து இருந்தார்.


இது ஆசிரியர்கள் மத்தியில் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆசிரியர்களின் உரிமைகளைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதற்கு, ஊதியத்தில் கைவைப்பதா என்று கேள்வி எழுப்பினர். இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றுகூட தகவல் வெளியானது. இந்த நிலையில், ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது என்று தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


19 நாட்கள் விடுமுறையாகவே கணக்கீடு


இதுகுறித்து அவர் கூறும்போது, ’’ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 19 நாட்கள் விடுமுறையாக கணக்கிடப்பட்டுள்ளது. சம்பளம் பிடித்தம் என்ற தகவலை தெரிவித்த ஒட்டன்சத்திரம் தொடக்கக் கல்வி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.