முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இயக்ககங்களின் ஆய்வுக் கூட்டம் நவம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இனி மாவட்டம்தோறும் துறை வாரியாக ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளேன் என்று அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அந்த வகையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடக்க உள்ளது. 


தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 8ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை நடந்த உள்ளார். அதனை முன்னிட்டு துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வி இயக்ககங்களின் இயக்குநர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.


புதிய திட்டங்கள் உண்டா?


பள்ளிக் கல்வித்துறை சார்பில், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம், கலைத் திருவிழா, விழுதுகள், நம் பள்ளி நம் பெருமை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், முதலமைச்சரின் திறனறிவுத் தேர்வு, அனைவருக்கும் ஐஐடிஎம், மணற்கேணி, வெளிநாட்டு கல்விச் சுற்றுலா என எண்ணிலடங்கா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 55-க்கும் மேற்பட்ட மாணவர் நலத் திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.


இந்த நிலையில், இவை தவிர்த்து புதிய திட்டங்கள் ஏதேனும் செயல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.


பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி


தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், பள்ளிக் கல்வித்துறைக்கு ஆண்டுதோறும் இருப்பதிலேயே அதிக அளவு நிதி ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.