அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககத்தின் இணை இயக்குநர்‌ (பணியாளர்‌) மகேஸ்வரி அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:


''தமிழ்நாடு ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு (Tamil Nadu Rural Students Talent Search Examination ) டிசம்பர்‌ 2024 -ன் தேர்வு மைய பெயர்ப் பட்டியல்‌ மற்றும்‌ தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டுகளைப்‌ பதிவிறக்கம்‌ செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு (TRUST) 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு வருகைபுரியும்‌ மாணவர்களின்‌ பெயர்‌ப் பட்டியலுடன்‌ கூடிய வருகைத் தாள்கள் (Nominal Roll Cum Attendance Sheet) தேர்வு மையம்‌ வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு மையமாகச் செயல்படும்‌ பள்ளியின் USER ID / PASSWORD - பயன்படுத்தி 09.12.2024 பிற்பகல்‌ முதல்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ள ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது.


எனவே, அனைத்து தேர்வு மைய முதன்மைக்‌ கண்காணிப்பாளர்களும்‌ தவறாமல்‌ பெயர்ப்‌ பட்டியலினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்‌.


தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டைப் பெறுவது எப்படி?


மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை 09.12.2024 பிற்பகல்‌முதல்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளம்‌மூலம்‌ தங்கள்‌ பள்ளியின்‌  USER ID / PASSWORD-ஐக் கொண்டு பதிவிறக்கம்‌ செய்துகொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌.


மேலும்‌, தமிழ்நாடு ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்விற்கு (TRUST) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வு கூட நுழைவுச்‌ சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ பதிவிறக்கம்‌ செய்து தலைமை ஆசிரியர்‌ கையொப்பம்‌ மற்றும் பள்ளி முத்திரையிட்டு வழங்கவும்‌, தேர்வு மைய விவரத்தினை அம்மாணவர்களுக்கு தெளிவாகத்‌ தெரிவிக்கவும்‌ தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌.


திருத்தம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?


மேலும்‌, தேர்வர்களின்‌ தேர்வுகூட நுழைவுச்‌ சீட்டுகளில்‌ பெயர்‌ / பிறந்த தேதி ஆகியவற்றில்‌ திருத்தம்‌ ஏதும்‌ இருப்பின்‌, சிவப்பு நிற மையினால்‌ பிழையினைச்‌ சுழித்து சரியான திருத்தத்தினைக்‌ குறிப்பிட்டு அப்பள்ளித்‌ தலைமையாசிரியர் சான்றொப்பம்‌ மற்றும்‌ முத்திரையிட வேண்டும்‌.


அத்தேர்வர்களை தேர்வெழுத அனுமதித்து பெயர்ப்பட்டியலில்‌ திருத்தங்களை சிவப்பு மையினால் மேற்கொள்ளுமாறு அனைத்து தேர்வு மைய முதன்மைக்‌ கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌''.


இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககத்தின் இணை இயக்குநர்‌ தெரிவித்துள்ளார்.