பள்ளி கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகக் கூறி வங்கிக் கணக்கு எண், OTP கேட்கும் அழைப்புகளை நம்ப வேண்டாம் என்று பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் கல்விச் செயல்பாடுகளுக்காகவும் கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா பிற திறமைகளுக்காகவும் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளும் தனியாரும் இந்த உதவித்தொகையை வழங்குகின்றன. இவை தவிர்த்து சமூக ரீதியாகவும் உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளி கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகக் கூறி வங்கிக் கணக்கு எண், ஓடிபி எண்களை சில மோசடிக்காரர்கள் கேட்பதாக புகார்கள் ஆங்காங்கே எழுந்து வருகின்றன. ஜி பே, போன் பே ஆகியவற்றில் உதவித்தொகை அனுப்பப்படும் என்று மோசடியாளர்கள் கூறி, ஓடிபி எண்ணைப் பெற்று மோசடி செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வகையிலும் முறைகேடு நடந்து வருகிறது.
மோசடிக்காரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்
இந்த நிலையில், இவ்வாறு ஏமாற்றும் மோசடிக்காரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை கூறும்போது, கல்வி உதவித் தொகையானது எஸ்சி/ எஸ்டி, பிசி, எம்பிசி நலத்துறைகள் மற்றும் சமூக நலத்துறை மூலம் நேரடியாகவே வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது.
அழைப்புகளை நம்ப வேண்டாம்
எனவே ஜி பே, போன் பேவுக்கு உதவித்தொகை அனுப்பப்படுவதாக வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே நடந்த மோசடி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனை சாதகமாக பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களின் வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.
மோசடியில் ஈடுபடுபவர்கள் கல்வித் துறையில் இருந்து ஊக்கத்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களை அணுகி அவர்களுக்கு ஆன்லைன் வாட்ஸ் ஆப் மூலம் QR Code அனுப்பி அதனை ஸ்கேன் செய்தால் உதவித்தொகை (Sholarship) கிடைக்கும் என போலியான செய்திகளை பரப்பி அவர்களை ஏமாற்றி அவர்கள் வங்கி கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொழிற்கல்வி இணை இயக்குநர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.