சமக்ர சிக்‌ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) என்று அழைக்கப்படும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.


இதன்படி பள்ளி கட்டமைப்பு வசதிகள், கல்வி, ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட பள்ளிகளுக்குத் தேவையான நிதியை ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இதற்கான செலவீனங்களை மதிப்பீடு செய்து, மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்பும். அதில் திட்டங்களின் அடிப்படையில், முழு தொகையோ, இல்லை குறைத்தோ மத்திய அரசு நிதி வழங்கும். சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின்படி, 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 40 சதவீத நிதிக்கு மாநில அரசே பொறுப்பு.


நிலுவையில் முதல் தவணை நிதி


இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டுக்கான நிதியாக ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கான 60 சதவீதத் தொகை ரூ.2,152 கோடி 4 தவணைகளில் ஒதுக்கீடு செய்யப்படும். முதல் தவணையாக ரூ.573 கோடி நிதி, ஜூன் மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் ஆகஸ்ட் மாதமே முடிய உள்ள நிலையில், நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்துத் தமிழக அரசு பல்வேறு நினைவுறுத்தல் கடிதங்களை அளித்தும், மத்திய அரசு இதுவரை கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.




என்ன காரணம்?


பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையும் மாநிலங்களுக்கு மட்டுமே சமக்ர சிக்‌ஷா அபியான் திட்ட நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ள 10+2 பாடத்திட்ட முறைக்கு பதிலாக 5+3+3+4 முறை, 6ஆம் வகுப்பில் இருந்து தொழிற்கல்வி, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கை அம்சங்கள் இதன் முக்கியக் கூறுகள் ஆகும். எனினும் புதிய கல்விக் கொள்கை அம்சங்களைத் தவிர்த்து பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு ஒப்புதல் அளித்து கடிதம் அனுப்பி இருந்தது. எனினும் இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. நிபந்தனைகள் இன்றி பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் மட்டுமே, நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், நிதி இல்லாவிடில் என்ன ஆகும் என்று ஆசிரியர்களிடம் ABP Nadu சார்பில் பேசினேன்.


ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கெளதமன் கூறியதாவது:


’’சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்துக்கான நிதி நிறுத்தப்பட்டிருப்பதால், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் பேருக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் பரவி வருகின்றன. நாங்கள் மாதாமாதம் 12,500 ரூபாய் மட்டுமே ஊதியம் பெறுகிறோம். அதுவும் 11 மாதங்களுக்கு மட்டுமே. எங்கள் ஊதியத்துக்கு மட்டும் அவ்வளவு நிதி தேவைப்படாது. பகுதி நேர ஆசிரியர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் இருப்பதால், அவ்வாறு புரிந்துகொள்ள நேரிட்டிருக்கலாம். இந்த நிதி எங்களுக்கு மட்டுமல்லாமல், பிற ஆசிரியர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கான ஊதியத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.


அதேபோல மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பள்ளிகளுக்கான சுகாதார, கட்டமைப்பு வசதிகள், மதிய உணவுத் திட்டத்துக்கான நிதி, கலைத் திருவிழா என எல்லாவற்றுக்கும் இதில் இருந்துதான் நிதி ஒதுக்கப்படுகிறது.


தொடர்ந்து ஆர்டிஇ சட்டத்தின்கீழ் 25 சதவீத மாணவர்களுக்கான கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், ஆசிரியர் பயிற்சி, மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சி ஆகியவற்றுக்கும் இதில் இருந்துதான் செலவழிக்கப்பட்டு வருகிறது.  


மாணவர்களின் நலனே பாதிக்கப்படும்


இந்த நிதியில் ஆசிரியர்களின் ஊதியம் முக்கியப் பங்கு வகித்தாலும் கட்டாயம் பள்ளி, மாணவர்களின் நலனே பாதிக்கப்படும். ஏனெனில் அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு, ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தி வைக்காது. ஏற்கெனவே திமுக அரசு மீது ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதி எண் 181-ல் தெரிவித்தபடி, பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவில்லை. இதனால் ஊதியத்தில் பிரச்சினை இருக்காது.


ஆனால் பள்ளிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகைகள் நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது’’ என்று கெளதன் தெரிவித்தார்.




கூட்டாட்சியை அவமதிக்கும் செயல்


நிதி நிறுத்திவைப்பு குறித்துப் பெயர் கூற விரும்பாத அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ’’இரு திட்டங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில், மத்திய அரசு எதற்காக நிதியை நிறுத்தியுள்ளது? இது கூட்டாட்சியை அவமதிக்கும் செயல்.


இதேபோக்கு தொடர்ந்தால், மாநில அரசு நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ஆசிரியர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய எந்த உரிமைகளையும் அளிக்காது. புதிய ஆசிரியர்கள் நியமனம், கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, பழைய ஓய்வூதியத் திட்டம் என எந்தத் திட்டங்களும் நடக்காது’’ என்று அச்சம் தெரிவித்தார்.


மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது கட்டாயம்


மாநில அரசு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு பதிலளித்த ஆசிரியர் கெளதமன், ’’எஸ்எஸ்ஏ நிதியை மத்திய அரசிடம் கேட்டு வாங்க முயற்சி எடுக்க வேண்டும். பொதுப் பட்டியலில் இருந்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். வெறுமனே கருத்துத் தெரிவித்துக்கொண்டு இருக்காமல், மற்ற மாநில முதலமைச்சர்களுடன் கலந்துபேசி, இதை ஓர் இயக்கமாகவே முன்னெடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.


ஒரு திட்டத்தில் சேரவில்லை என்பதற்காக இன்னொரு திட்டத்துக்கு நிதி தர மறுக்கும் போக்கு, ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்வதாக எழும் விமர்சனங்களை மத்திய அரசு கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.