அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு குழந்தைக்கும் வகுப்பு வாரியாக ஆகும் செலவு எவ்வளவு என்ற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ சட்டம்- RTE Act) தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்க சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். எனினும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது.
2010 முதல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்
இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. நாடு முழுவதும் 2010ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது.
முன்னதாக, இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது தொடர்பான விவரங்களைப் பொது வெளியில் தனியார் பள்ளிகள் அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர் மத்தியில் பரவலாக எழுந்தது. செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பதாகவும் கூறப்பட்டது.
குலுக்கல் முறை அறிமுகம்
இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டு முதல் இந்த முறை அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 9,000 தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட 1.1 லட்சம் இடங்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
இந்த நிலையில், அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு குழந்தைக்கும் வகுப்பு வாரியாக ஆகும் செலவு எவ்வளவு என்ற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை அரசின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.
எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை
இதன்படி, கடந்த 2022- 23ஆம் கல்வி ஆண்டில் எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செலவிட்ட தொகை எவ்வளவு என்று பார்க்கலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் எல்கேஜி மற்றும் யூகேஜி படிக்க, தலா 6 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை, 12 ஆயிரத்து 76 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா 15 ஆயிரத்து 711 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
2023- 24ஆம் ஆண்டு, 2024- 25ஆம் கல்வி ஆண்டு மற்றும் 2025- 26ஆம் கல்வி ஆண்டில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆகும் செலவு குறித்தும் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் எல்கேஜி மற்றும் யூகேஜி படிக்க, தலா 6 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது. அதே நேரத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு செலவழிக்கப்படும் தொகை சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 12 ஆயிரத்து 659 ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா 16 ஆயிரத்து 477 ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது.