இன்று (மார்ச் 19) நடைபெறுவதாக இருந்த ஆர்ஆர்பி உதவி லோகோ பைலட் இரண்டாம் கட்டத் தேர்வு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தேர்வு மையம் அமைக்கப்படாமல்  தெலங்கானா மாநிலத்துக்குச் சென்ற சென்ற தேர்வர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.


இந்திய ரயில்வே ஆள்தேர்வு வாரியம் மூலம் ரயில்வே பணிகளுக்கான காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் உதவி ஓட்டுனர் பணிக்கான (Assistant Loco Pilot) தேர்வும் நடத்தப்படுகிறது. இதில், ஏஎல்பி முதற்கட்டத் தேர்வு கணினி மூலம் கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.


அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு


முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு, இரண்டாம் கட்ட கணினித் தேர்வுகள் (CBT 2) இன்று (மார்ச் 19ஆம் தேதி) நடைபெறுவதாக இருந்தன. இந்தத் தேர்வை எழுத தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


இதனால் பல நூறு கி.மீ. தொலைவு பயணித்து தேர்வெழுத முடியாது என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாட்டிலேயே தேர்வு மையத்தை அமைக்கவும் கோரிக்கை விடுத்தனர். எனினும் ஆர்ஆர்பி அதற்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. 


தொழில்நுட்பக் காரணங்களால் தேர்வு ஒத்திவைப்பு


இந்த நிலையில் கடும் சிரமங்களுக்கு மத்தியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் அண்டை மாநிலங்களுக்கு தேர்வு எழுதச் சென்றனர். எனினும் தொழில்நுட்பக் காரணங்களால் இன்றைய தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவித்துள்ளது.


தமிழகத் தேர்வர்கள் கடும் அவதி


இதுதொடர்பான நோட்டீஸ் தேர்வு மையங்களின் வெளியே ஒட்டப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர், குறுஞ்செய்தி மற்றும் இ மெயில் மூலம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத் தேர்வர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.