யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள், https://ugcnet.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.


யுஜிசி நெட் தேர்வு


இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நெட் நுழைவுத் தேர்வு, இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படும் என்று அண்மையில் யுஜிசி தெரிவித்தது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஜூன் மாத அமர்வு ஒத்திவைப்பு


இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி முறையில் நடத்தப்படுகிறது.


2024ஆம் ஆண்டுக்கான ஜூன் மாத அமர்வு 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. எனினும் தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் ஒரே நாளில், தேர்வு ஓஎம்ஆர் முறையில் நடைபெற உள்ளது.




இந்த நிலையில் இந்த அமர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், மே 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 11.59 மணி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மே 17ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். 20ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். இந்த அறிவிப்பை யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.


விண்ணப்ப கட்டணம்


பொதுப் பிரிவு- ரூ.1,150


ஓபிசி நான் கிரீமி லேயர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் – ரூ.600


எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளிகள் – ரூ.325


மூன்றாம் பாலினத்தவர் – ரூ.325


அவகாச நீட்டிப்பு குறித்த அறிவிக்கையை முழுமையாகக் காண: https://ugcnet.nta.ac.in/images/public-notice-for-extension-of-dates-for-ugc-net-june-2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


விண்ணப்பிக்காத தேர்வர்கள், https://ugcnet.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.


முன்னதாகத் தேர்வர்கள் https://ugcnet.ntaonline.in/frontend/web/registration/index என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்ய வேண்டும்.