நீட் தேர்வுக்காலம் 3 மணிநேரத்திற்குபதிலாக 3.15 நிமிடமாகநீட்டிக்கப்பட்டு உள்ளதாக தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. நீட் மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் 2026-ம் ஆண்டிற்கான நீட் மறு தேர்வுக்கான ஏற்பாடுகள் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இம்முறை தேர்வில் ஒரு முக்கிய மாற்றமாக, வினாத்தாள்களைப் படித்துப் பார்த்துப் புரிந்துகொள்ள மாணவர்களுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கும் நோக்கில், தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் 15 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது 195 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
கணக்கீட்டு தாள்கள் எண்ணிக்கை
மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நீட் தேர்வு நடக்க உள்ளது. அதேபோல ரஃப் கணக்கீட்டு வேலைகளுக்காக அளிக்கப்பட்டு வந்த 2 பக்கங்கள், 4 பக்கங்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் முதல் 2 பக்கங்கள் வினாத்தாளின் முதலிலேயேயும் அடுத்த இரு பக்கங்கள் கடைசியிலும் அளிக்கப்பட உள்ளது.
கடந்த முறை போன்று அல்லாது, எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் தராத வகையில், இம்முறை கடுமையான மற்றும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிர பாதுகாப்பு நடவடிக்கை
ஆள் மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் எந்தவிதத் தவறுக்கும் இடமளிக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் பல கட்டங்களாக நடக்கும் தீவிர சோதனைக்குப் பிறகே மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட் எப்போது?
நீட் மறு தேர்வுக்கான தேர்வு மைய விவரம் வெளியான நிலையில், ஹால் டிக்கெட் (Admit Card) எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான பிரத்யேக டவுன்லோட் லிங்க் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்களது நுழைவுச்சீட்டை எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஹால் டிக்கெட் அதிகாரப்பூர்வமாக வெளியானவுடன், அதில் இடம்பெற்றுள்ள தேர்வு மையத்தின் முகவரி, தேர்வு நேரம் மற்றும் வழிகாட்டுதல்களை மாணவர்கள் கவனமாகப் படித்துப் பின்பற்ற வேண்டும்.
இதுதொடர்பான விவரங்களை http://www.nta.ac.in/Download/Notice/Notice_20260612114428.pdf என்ற இணைப்பில் காணலாம்.
