பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிக்க என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை பட்டியல் அளித்துள்ளது.
மழை என்றாலே மாணவர்களுக்கு உடனே விடுமுறையும் சேர்ந்துதான் நினைவுக்கு வரும். மழை என்று பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால், மழை நின்றுவிடும். மழை இருக்காது என்று பள்ளிகள் செயல்பட்டால், மழை பொழிந்து தள்ளும்.
தமிழ்நாடு முழுவதும் தொடரும் கனமழை
இதற்கிடையே தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ச்சியாக இதன் காரணமாக வேலைக்கு செல்லும் நபர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவியர்கள், அத்தியாவசியத்தை நம்பி உழைக்கும் மக்கள் என பலரும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வானிலை மையம் அறிவிப்பின்படி, அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிக்க என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை பட்டியல் அளித்துள்ளது.
லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை இல்லை
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளதாவது:
* அதிக மழையோ, கன மழையோ பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.
* லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்கக் கூடாது.
* விடுமுறை குறித்த முடிவை, பள்ளி துவங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாக எடுக்க வேண்டும்.
* மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டம் முழுமைக்குமான மழை நிலவரம், பாதிப்பு நிலவரம், மழை நீர் தேங்கக் கூடிய பகுதிகள்உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையை அளிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு மட்டுமே விடுமுறை
* பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுமைக்கும் தேவையில்லாமல் விடுமுறை அறிவிக்க கூடாது.
* மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்போது, அதனை ஈடு செய்யும் வகையில் சனிக்குழமை போன்ற நாட்களில் வகுப்புகளை நடத்த வேண்டும்.
* விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் மாணவர்களுக்கு முழுமையாக நடத்தி முடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருந்தால், அவற்றை அப்புறப்படுத்துவதற்கும், மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தும் பள்ளிகள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.