TN School Quarterly Leave: பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


இதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரையிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 5ஆம் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. 


முன்னதாக 1 முதல் 10ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு டிசம்பர் 19ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்றும், 11 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது.


ஆண்டுத் தேர்வுகள் 


1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 


2022-23 ஆம் கல்வியாண்டுக்கான விடுமுறை ஏப்ரல் 30 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி முடிவடைகிறது. இந்தக் கல்வியாண்டில் 210 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மாணவர்களுக்கான ஆண்டு நாட்காட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 


கொரோனா தொற்றால் தள்ளிப்போன திறப்பு


தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் கடந்த 2021- 22ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. 


இந்த சூழலில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.




இந்த மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.  குறிப்பாக 1 முதல் 10ஆம் வகுப்பு வரை ஜூன் 13ஆம் தேதியும் பதினொன்றாம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன.


காலாண்டு விடுமுறை


இந்நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரையிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 5ஆம் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.