புதுக்கோட்டை மாவட்டத்தில் கன மழை காரணமாக இன்று மாலை 3 மணியுடன் பள்ளிகளை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 3 மணியுடன் மாணவர்கள் வீடுகளுக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


மாலை 4 மணிக்குள், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைவு 


கன மழை எச்சரிக்கையை அடுத்து, எண்டிஆர்எஃப் எனப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 5 டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 210 பேர் கொண்ட 7 குழுக்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு விரைந்து உள்ளன. 


புதுக்கோட்டையில் காலை முதலே பரவலாக மழை பெய்து வந்த நிலையில், மாலை 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். 


மிக கனமழை வாய்ப்பு


அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நாளை 3.7 மீ வரை கடல் அலை மேலெழும்பக் கூடும், சீற்றம் மற்றும் கடலரிப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கடல் சீற்ற எச்சரிக்கை


கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் (வடக்கு) மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு கடல் சீற்ற எச்சரிக்கையை பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய கடல்சார் தேசிய மையம் (INCOIS) விடுத்துள்ளது.


இதையும் வாசிக்கலாம்: Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!