புதுச்சேரி: பாகுபாடு இல்லாமல் அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டினை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

10 சதவீத இட ஒதுக்கீடு

புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 12-வது நாள் அலுவல் கூட்டத்தில் உறுப்பினர்களின் வினா விடைகள், நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும், அனைத்து துறை அமைச்சர்களின் மானிய கோரிக்கைகள் குறித்தான பதில் உரைகளும் இடம்பெற்றன.

அப்போது பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், 10 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் முழுமையாக அரசே செலுத்தி வருகின்றது. இந்த ஆண்டு முதல் அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு செவிலியர், வேளாண், சட்டம், மற்றும் கால்நடை மருத்துவம் போன்றவை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் கல்வி கட்டணம் செலுத்தப்படும். புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மற்றும் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தெரிவித்தார். 

Continues below advertisement

அனைத்து மாணவர்களுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு

இந்த நிலையில், MBBS எம்.பி.பி.எஸ்., ஆயுர்வேதம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளில் மட்டும் தற்போது 10 சதவீத இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு தரப்படுகின்றது. இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து படிப்புகளிலும் அமல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பினை இந்தாண்டே அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

நீட் அல்லாத படிப்பு களுக்கு சென்டாக் விண்ணப்பம் பெற்றும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ள சூழ்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அரசு முடிவு எடுக்காதது வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது. நீட் அல்லாத படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்தாமல் சென்டாக் மெத்தனம் காட்டி வருகிறது. இதற்கிடையில், சென்டாக் அதிகாரிகளுடன் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். அப்போது, கலை அறிவியல் படிப்புகளில் ஏற்கனவே கிராமப்புற மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதன் மூலம் 70 சதவீதம் வரை அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் கலை அறிவியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தினால் குழப்பம் தான் ஏற்படும்.

அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு

எனவே, பி.டெக்., உள்ளிட்ட தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடங்களை அமல்படுத்தலாம் என தெரிவித்தனர். ஆனால், ஒரு சில படிப்பு களில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்திவிட்டு, மற்ற படிப்புகளில் அமல்படுத்தாமல் விட்டால் அதைவிட பெரிய குழப்பம் ஏற்படும். எனவே அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்தாண்டே அமல்படுத்தி விடுங்கள் என, அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார். இது தொடர்பான கோப்பு தற்போது தயாராகி துறை செயலர் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கோப்பு கேபினெட்டில் வைத்து முறைப்படி அரசாணையாக வெளியிடப்பட உள்ளது. அரசின் அனுமதியை தொடர்ந்து இந்தாண்டு அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அமலாகிறது.