புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ சேர்க்கை குளறுபடி விவகாரத்தில் சென்டாக் அதிகாரிகள் 2 பேர் நீக்கப்பட்டனர். சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு, இணை ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் ஆகியோர் நீக்கப்பட்டனர். மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கையை தாமதமாக நடத்திய விவகாரத்தில் இருவர் நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக உயர்கல்வி இயக்குனர் அமன் சர்மா, கஸ்தூரிபாய் கல்லூரி முதல்வர் ஷெரில் ஆன் சிவம் நியமனம் செய்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மருத்துவ மாணவர் சேர்க்கை சென்டாக் கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு காலதாமதமாக நடத்தப்பட்டிருக்கும் நிலையில் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாகவே கலந்தாய்வு காலதாமதம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பிருக்கின்றனர்.
இதுகுறித்து புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் தெரிவித்ததாவது:
சென்டாக் மாணவர் பிரச்சனையில் சென்டாக் நிர்வாகம் குளறுபடிகளை செய்ததால், 441 மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை 30-09-2023-க்குள் முடிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்திருந்தது. ஆனால் சென்டாக் நிர்வாகம் தேசிய மருத்துவ கவுன்சில் அறிவித்திருந்த இறுதி தேதிக்கு பிறகு சுமார் 450 மாணவர்களை மருத்துவ கல்வியில் சேர்த்துள்ளனர். ஏற்கனவே இதுபோன்று காலதாமதம் செய்து சேர்க்கப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தின் மூலம் கல்வி பயின்றனர். தற்போது சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட் வரை செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
காலதாமதத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என துணை நிலை ஆளுநர் தெரிவித்திருந்தார். மாணவர் சேர்க்கை காலதாமதம் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்த பிறகும், ஏன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துணைநிலை ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்டாக் நிர்வாகம் என்பது திறமையற்ற ஒரு நிர்வாகம். இது சட்டவிரோத அமைப்பாக ஒரு தனியார் நிறுவனம் போன்று செயல்பட்டுள்ளது. இந்த அமைப்பை முழுமையாக முதலமைச்சர் அவர்கள் கலைத்துவிட்டு புதிய அமைப்பினை உருவாக்க வேண்டும்.
தற்போது காலதாமதத்திற்கு விளக்கம் கேட்டு தேசிய மருத்தவ கவுன்சில் புதுச்சேரி அரசு ஒருவார காலத்திற்குள் பதில் அளிக்க கடிதம் அளித்துள்ளது. இதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் நேரிடையாக டெல்லிக்கு சென்று பிரச்சனையை தீர்க்க வேண்டும். அரசு தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டால் மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களின் நலனுக்காக கழக பொதுச்செயலாளரின் அனுமதி பெற்று அதிமுக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் என கூறினார்.
இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் மருத்துவ சேர்க்கை குளறுபடி விவகாரத்தில் சென்டாக் அதிகாரிகள் 2 பேர் நீக்கப்பட்டுள்ளனர். சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு, இணை ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் ஆகியோர் நீக்கப்பட்டனர். மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கையை தாமதமாக நடத்திய விவகாரத்தில் இருவர் பணி நீக்கம் செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.