புதுச்சேரி: பி.டெக். இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான லேட்ரல் என்ட்ரி சிறப்புக் கலந்தாய்வு வரும் 18-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறுகிறது.

Continues below advertisement

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டப வளாகத்தில் இயங்கி வரும் சென்டாக் அலுவலகத்தில் இந்த நேரடி சிறப்புக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

நேர அட்டவணை

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சென்டாக்கில் ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு காலை 11 மணிக்கும், பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு காலை 11.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

Continues below advertisement

அதனைத் தொடர்ந்து, பிற மாநிலங்களைச் சேர்ந்த சென்டாக்கில் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மதியம் 2 மணிக்கும், பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு மதியம் 2.30 மணிக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்ட பின்னரே பிற மாநிலங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சேர்க்கைக்கு பரிசீலிக்கப்படுவர்.

காரைக்கால், மாகே, ஏனாம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சென்டாக் அலுவலகத்திற்கு நேரில் வருவதுடன், கூகுள் மீட் இணையவழி இணைப்பு மூலமாகவும் காலை 10.45 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

தகுதி மதிப்பெண்கள்

புதுச்சேரி பொதுப்பிரிவு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

புதுச்சேரி ஓ.பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பி.டி., மீனவர் மற்றும் முஸ்லிம் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களது தகுதி மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களை சென்டாக் இணையதளத்தில் தங்களது லாக்-இன் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

அசல் ஆவணங்கள் கட்டாயம்

கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள், அதற்கு முன்பாக சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் இடங்களின் விவரங்களைப் பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஏற்கனவே சென்டாக் மூலம் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு பாடப்பிரிவு அல்லது கல்லூரியை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கலந்தாய்வு நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக மட்டுமே சென்டாக் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தின் நகல், டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அசல் ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 0413-2655570, 0413-2655571 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், சென்டாக் இணையதளத்தில் உள்ள குறைகேட்பு பகுதி மூலமாகவும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களைத் தெரிவிக்கலாம்.