நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல்களைப் பெற்றோர்கள், மாணவர்களைப் பள்ளிகளுக்கு வரவழைத்து  9-ம் தேதி வரை வழிகாட்ட வேண்டும் வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


அனைத்து வகைப் பள்ளிகளுக்கும், பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:


’’இவ்வாண்டில்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு முடித்த மாணவர்கள்‌ உயர்‌ கல்வியில்‌ சேர உள்ளனர்‌. பொறியியல்‌ கலந்தாய்வு வரும்‌ நாட்களில்‌ தொடங்க உள்ளது. கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளுக்கான மாணவர்‌ சேர்க்கையும்‌ நடந்து கொண்டிருக்கிறது. மேலும்‌ உயர்‌ கல்வி குறித்த பல்வேறு நுழைவுத் தேர்வுகளின்‌ முடிவுகள்‌ வரவிருக்கிறது. 


இந்நிலையில்‌ பள்ளிகளில்‌ 07.09.2022 முதல்‌ 09.09.2022 வரை, உயர்‌ கல்வி குறித்த ஆலோசனைகள்‌ - கல்லூரி சேர்க்கை குறித்த தகவல்கள்‌, தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுதல்‌ மற்றும்‌ திட்டமிடுதல்‌ சார்ந்து ஆலோசனைகள்‌ வழங்க ஏற்பாடு செய்யப்பட்‌டுள்ளது.


* பள்ளி அளவில்‌
* மாவட்ட அளவிலான சிறப்பு மையங்களில்‌
* தொலைபேசி வாயிலாக - 14417,104


அனைத்து வகையான அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்‌ 2021- 22ஆம்‌ ஆண்டில்‌ உயர்‌ கல்வி பயில இருக்கும்‌ மாணவர்களையும்‌ அவர்தம்‌ பெற்றோரையும்‌ இன்று (07.09.2022 செவ்வாய்‌க்கிழமை) முதல்‌ 09.09.2022 வரைகீழ்காணும்‌ வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகளுக்கு வரச்‌ செய்து உயர்கல்வி வழிகாட்டுதல்கள்‌ மற்றும்‌ ஆலோசனைகள்‌ வழங்க கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.


ஆலோசனை மற்றும்‌ வழிகாட்டல்‌ வேண்டி பள்ளிக்கு வரும்‌மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி பெற்ற முதன்மைப் பயிற்சியாளர்கள்‌ / ஆசிரியர்கள்‌ தகுந்த ஆலோசனைகள்‌ மற்றும்‌ பிற வாய்ப்புகள்‌ குறித்து தகவல்கள்‌ அளித்து உதவ வேண்டும்‌.


கூடுதல்‌ உதவிகளுக்கு 14417 மற்றும்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில்‌ உள்ள ஆலோசகர்களை அணுக மாணாக்கர்‌ மற்றும்‌ பெற்றோருக்கு வழிகாட்ட வேண்டும்‌.


ஆலோசனையின்‌ போது மாணாக்கர்‌ உயர்கல்வி மற்றும்‌ போட்டித்‌ தேர்வு முடிவுகள்‌ குறித்து எதேனும்‌ கவலையாகவோ, பதட்டமாகவோ அல்லது குழப்பமான மனநிலையில்‌ இருக்கிறார்‌ என்பது கண்டறியப்படும்‌ பட்‌சத்தில்‌, 14417 அல்லது 104 உதவி எண்ணுக்கு அல்லது முதன்மை பயிற்சியாளர்‌ இணைப்பு வழங்கி தொடர்பு கொள்ள செய்தல்‌ வேண்டும்‌.


மாவட்ட அளவிலான மையங்கள்‌


மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில்‌ அமைக்கப்பட்டுள்ள மையங்களில்‌ உள்ள ஆலோசகர்கள்‌ தக்க ஆலோசனைகளையும்‌, வழிகாட்டுதல்களையும்‌ வழங்குவர்‌. அதற்கான இடவசதி மற்றும்‌ பிற தேவைகளை செய்தல்‌ வேண்டும்‌.


முதன்மைக்‌ கல்வி அலுவலகத்துக்கு மாணாக்கரோ அவர்தம்‌ பெற்றோரோ நேரிலோ / தொலைபேசியிலோ வழிகாட்டல்‌ கோரி தொடர்பு கொண்டால்‌ அதற்கான வழிகாட்டுதல்கள்‌ இணைப்பில்‌ கண்டுள்ள முதன்‌மை பயிற்சியாளர்களால்‌ வழங்கப்பட வேண்டும்‌. மேலும்‌ மாநிலத்‌ திட்ட இயக்ககத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ உயர்கல்வி வழிகாட்டும்‌ தன்னார்வலர்ளையும்‌ மாணவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்குவதற்குப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌.


முதன்மை பயிற்சியாளர்கள்‌


பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ சார்பாக செயல்பட்டு வரும்‌ உதவி எண்‌ 14417-க்கு, மாணவர்களிடம்‌ இருந்து வரும்‌ தொலைபேசி தகவல்களில்‌ கூடுதல்‌ விவரங்கள்‌ / நேரடி உதவிகள்‌ தேவையெனில்‌ அந்தந்த மாவட்டத்தில்‌ உள்ள முதன்மைப்‌ பயிற்சியாளர்களுடன்‌ மாணவர்களுக்கு தொடர்பு ஏற்படுத்தித்‌ தந்து வழிகாட்டப்படுவர்‌. ஆகவே 9ஆம் தேதி வரை முதன்மைப் பயிற்சியாளர்கள்‌ சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில்‌ தயாராக இருக்க வேண்டும்‌.


அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ மேற்காண்‌ வழிமுறைகளை பின்பற்றி, உயர்கல்வி பயிலவிருக்கும்‌ மாணவர்களுக்கு உரிய ஆலோனைகள்‌ மற்றும்‌ வழிகாட்டுதல்கள்‌ வழங்கிட உரிய நடவடிக்கைகள்‌ எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌’’.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.