பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு கொண்டு வந்த பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைத் தமிழகத்தில் அமல்படுத்த ஆர்வமாக உள்ளதாகவும் இதற்கெனக் குழு அமைத்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்தியக் கல்வித்துறை செயலர் சஞ்சய் குமார் ஐஏஎஸ்-க்கு எழுதிய கடிதத்தில், ’’தமிழக அரசு கல்வித் துறையில் தாக்கங்களை ஏற்படுத்தும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. தன்னுடைய மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வியை அளிப்பதில் உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மிகவும் ஆர்வமாக உள்ளது. இதற்காக பள்ளிக் கல்வித்துறைச் செயலர் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கு முன்னால் ஒப்பந்தம்


குழுவின் பரிந்துரை அடிப்படையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டு தொடங்கப்படும் முன் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் தமிழக அரசு, தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்துவதில் ஆர்வமாக இருப்பது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


’’புதிய கல்விக் கொள்கை வரைவு நிலையில் இருக்கும்போதே அதை எதிர்த்தோம். 2019-ல் குலக்கல்வி, மும்மொழிக் கொள்கை, தேசிய உதவித்தொகை தளத்தை உருவாக்கி, உதவித்தொகை கண்காணிப்பு, 3, 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறோம். அதற்காகத்தான் மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறோம். மாநில கல்விக் கொள்கையில் இருக்கும் அம்சங்களையே அறிமுகம் செய்வோம்.


குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு


மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் தவணை நிதியில் 3ஆவது, 4ஆவது தவணை நிதியை விடுவிக்க வேண்டும் என்று கூறி உள்ளோம். பிஎம்ஸ்ரீ உள்ளிட்ட திட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு, குழு அமைத்து, குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளோம்.


தேசிய கல்விக் கொள்கையை நோக்கி தமிழ்நாடு பயணப்படுமோ என்று அச்சம்கொள்ள வேண்டாம். பிஎம் ஸ்ரீ திட்டமும் தேசிய கல்விக் கொள்கையும் தனித் தனியாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் வேண்டுமென்றே இணைத்து, அதில் சேர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். நாங்களின் மாநில அரசின் தேவைகளை எடுத்துச் சொல்வோம். நடக்கவில்லை எனில் நாங்களே பார்த்துக் கொள்வோம்.


மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில்தான் மத்திய அரசு நடந்துகொள்கிறது. அரசியலுக்காக நான் இதைப் பேசவில்லை''.


இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.