உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி பிரச்சி நிகாம் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்த நிலையில், அவரின் தோற்றம் இணையத்தில் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்தவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி பிரச்சி நிகாம். 55 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 98.5 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இருந்தார். இவர், தன்னுடைய முகத்தில் இருக்கும் முடியால் இணைய வெளியில் விமர்சிக்கப்பட்டார். கேலி, கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டார்.
இதுகுறித்து தனியார் செய்தித் தளத்துக்கு பிரச்சி நிகாம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
‘’நான் அதிக மதிப்பெண்களையே பெறாமல் இருந்திருக்கலாம். ஓரிரு மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றிருந்தால், எனக்கு சமூக வலைதளத்தில் பாப்புலாரிட்டி கிடைத்திருக்காது. என்னுடைய தோற்றத்துக்காக இத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளவும் நேர்ந்திருக்காது என்று உருக்கத்துடன் புன்னகைக்கிறார்.
தோற்றமல்ல.. மதிப்பெண்களே முக்கியம்
என்னுடைய தோற்றத்தைவிட, மதிப்பெண்களே மிகவும் முக்கியம் என்கிறார் பிரச்சி. தொடர்ந்து அவர் பேசியதாவது:
’’மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், இணைய வெளியில் நான் கேலி, கிண்டலுக்கு ஆளாக்கப்படுவது வேதனையாக உள்ளது. இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
கடவுள் என்னை இப்படித்தான் படைத்திருக்கிறார். எனக்கு அதில் பிரச்சினையில்லை. ஆனால் சிலருக்கு இது உறுத்துகிறது. ஆனால் அதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.
சாணக்யர் கூட கேலிக்கு ஆளாக்கப்பட்டார்
என்னுடைய குடும்பமோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ என்னை கேலி செய்யவில்லை. சாணக்யர் கூட கேலிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் பயப்படவில்லை. நானும் அப்படித்தான் இருக்கப் போகிறேன். படிப்பில் இன்னும் கவனம் செலுத்துவேன். பொறியாளர் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்று பிரச்சி நிகாம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரின் தந்தை நிகாம் பேசும்போது, பிரச்சிக்கு மருத்துவ சிகிச்சை எடுக்கத் திட்டமிட்டு இருந்தோம். அதற்கு முன்பாக இப்படி ஆன்லைனில் வைரலாகி விட்டது. விரைவில் மருத்துவ உதவியை நாட உள்ளோம். மக்கள் ஒரு விஷயத்தை ட்ரோல் செய்யும் முன்னால், அவரின் குடும்பத்தினர் குறித்தும் யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இணையத்தை நல்ல வழியிலும் பயன்படுத்தலாம். தீய வழிக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற சூழலில், மக்கள் அதைக் கையாள்வதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்களின் உணர்ச்சிகளில் விளையாடக்கூடாது என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.