அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கும் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கும் அரசின் சலுகைகள் கிடைத்திட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் சுமார் 8,400 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 28.44 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். சென்னை, சேலம் போன்ற நகரங்களில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாகவும், நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவும் உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் நிதி உதவி பெறும் மாணவர்கள் என பாகுபாடு இல்லாமல் புத்தகம், நோட்டு, சைக்கிள், பஸ் பாஸ்  கிடைக்கிறது.

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கிடையாதா?

எனினும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் 7.5 % சதவீத இடஒதுக்கீடு, அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிடைப்பதில்லை. புதுமைப் பெண் திட்டம் மூலம் கிடைக்கும் ரூ.1,000 நிதி உதவி மாணவிகளுக்கு கிடைப்பதில்லை. காலை  உணவு திட்டத்தில்  ஆரம்பத்தில் நிதி உதவிபெறும்  பள்ளிகள்  இணைக்கப்படாமல் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் சிறப்பு திட்டங்களான மாதிரிப்பள்ளி, டிஜிட்டல் கிளாஸ், உள் கட்டமைப்பு உள்ளிட்டவைகள் நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை.

Continues below advertisement

2021-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தி, இதில் 2.5 சதவீதத்தை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடாக வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கும் 7.5% இட ஒதுக்கீடு

ஆனால் சட்டப்பேரவையின் இறுதி கூட்டத் தொடரிலும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கூறி, நீட் தேர்வில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி, தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் அண்மையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

பல்வேறு துறையினர் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தொடர்ந்து போராடும் வேளையில், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் போராடுவது வரவேற்கத்தக்கது. அவர்களை நான் பாராட்டி வாழ்த்துகிறேன்.

பாகுபாடு வேண்டாம்

எனவே தமிழக அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்கும் அனைத்து சலுகைகள், திட்டங்களிலும் இணைப்பதே “தமிழ்நாட்டில் யாரையும் பின் தங்க விடமாட்டோம்” என்ற முழக்கத்திற்கு பொருத்தமாக இருக்கும்’’ என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.