கல்வியில் சிறந்த என்று எந்தப் பட்டியல் எடுத்தாலும் தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு அதில் இடம் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.


இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:


’’பிரதமர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்துகள். திராவிடக் கொள்கைகளை தமிழகத்தில் முழங்கிய பாரதிதாசன் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.


இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என்று எந்தப் பட்டியல் எடுத்தாலும் தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு அதில் இடம் இருக்கும். மாணவர்களுக்கு அனைவருக்கும் பள்ளிக் கல்வி, கல்லூரி, ஆராய்ச்சிக் கல்வியை வழங்குகிறது நம் திராவிட மாடல் அரசு. பல்கலைக்கழகங்கள் சமூக நீதியையும் புதுமைகளையும் புகுத்தும் இடமாக இருக்க வேண்டும்.


 தமிழ்நாட்டு மாணவர்களை - படிப்பிலும்‌, வாழ்க்கையிலும்‌ வெற்றியாளராக்குவதற்கு "நான்‌ முதல்வன்‌" திட்டம்‌ உருவாக்கப்பட்டுள்ளது.


உயர்கல்வி மாணவர்களின்‌ சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும்‌ வகையில்‌, "CM Research Grant Scheme",


* உயர்கல்வி மாணவர்களின்‌ சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும்‌ வகையில்‌, "CM Fellowship Program" ஆகிய திட்டங்கள்‌ செயல்படுத்தப்படுகிறது.


*  பெண் கல்வியை ஊக்குவிக்கும்‌ பொருட்டு "மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித்‌ திட்டம்‌" எனும்‌ புதுமைப்பெண்‌ திட்டத்தின்‌ மூலம்‌ அரசுப்‌ பள்ளியில்‌ படித்து, கல்லூரிக்குள்‌ நுழையும்‌ 3 லட்சத்து 45 ஆயிரத்து 362 மாணவியருக்கு மாதம்‌ தோறும்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்கப்படுகிறது.


* தமிழ்நாடு மாணவர்கள்‌ போட்டித்‌ தேர்வுகள்‌, ஆட்சிப்‌ பணித்‌ தேர்வுகள்‌, திறன்சார்ந்த தேர்வுகளுக்கு தயார்‌ செய்யும்பொருட்டு மதுரையில்‌ "கலைஞர்‌ நூற்றாண்டு நினைவு நூலகம்‌" அமைக்கப்பட்டிருக்கிறது.


* எனது கனவுத்‌ திட்டமான, “நான்‌ முதல்வன்‌” திட்டத்தின்‌ மூலம்‌ இரண்டு ஆண்டுகளில்‌ 29 லட்சம்‌ மாணவர்களுக்கும்‌, 32 ஆயிரம்‌ ஆசிரியர்களுக்கும்‌ திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.


ஒரு வருடத்தில்‌, ஒரு லட்சத்து 40 ஆயிரம்‌ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி, அனைத்து தரப்பு மாணவர்களும்‌
தொழிற்கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2021- 22, 2022- 23, 2023-24 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில்‌
இந்த இட ஒதுக்கீட்டின்‌ மூலம்‌ 28 ஆயிரத்து 49 மாணவர்கள்‌ பொறியியல்‌, மருத்துவம்‌, வேளாண்மை, சட்டம்‌, மீன்வளம்‌ மற்றும்‌ கால்நடை மருத்துவம்‌ ஆகிய படிப்புகளில்‌ சேர்ந்துள்ளார்கள்‌. இவர்களின்‌ கல்விக்‌ கட்டணம்‌,
விடுதிக்‌ கட்டணம்‌, பேருந்துக்‌ கட்டணம்‌ அனைத்தையும்‌ தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு 4682 கோடி ரூபாய்‌ செலவிடுகிறது.


இன்று பட்டம்‌ பெறும்‌ மாணவ கண்மணிகளே! நீங்கள்தான்‌ நாட்டின்‌ எதிர்காலம்‌! சிறந்த அதிகாரிகளாக - தொழில்முனைவோர்களாக நீங்கள்‌ தேர்ந்த துறையில்‌ சிறந்து விளங்குங்கள்‌!


சமுதாயமும்‌, பெற்றோரும்‌, உங்களுக்கு தந்த கல்வியை பயன்படுத்தி உங்கள்‌ பெற்றோருக்கும்‌ - சமுதாயத்திற்கும்‌ - நாட்டிற்கும்‌ உங்கள்‌ சேவையை திரும்ப வழங்கிடுங்கள்‌! முக்கியமாக, சிறந்த மனிதர்களாக
விளங்குங்கள்‌! உங்கள்‌ வெற்றிக்கு உறுதுணையாகும்‌ பட்டங்களை வழங்கிய பல்கலைக்கழகத்துக்கும்‌, நீங்கள்‌ பட்டம்‌ பெற காரணமான ஆசிரியர்களுக்கும்‌ பெருமை தேடி தாருங்கள்‌!


இந்தியாவிற்கும்‌, தமிழ்நாட்டிற்கும்‌ புகழ்‌ சேருங்கள்‌!’’


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசினார்.