இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தி, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசால் பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் (PM Internship Scheme) பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி இளைஞர்களுக்கு இந்தியாவின் தலைசிறந்த 500 முன்னணி நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி வழங்க இத்திட்டம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் சேர, என்னென்ன தகுதிகள் வேண்டும் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்ற முழுமையான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
யாரெல்லாம்விண்ணப்பிக்கலாம்?
இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் 21 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது கட்டாயம். விண்ணப்பதாரர்கள் எந்தவொரு முழு நேர வேலையிலோ அல்லது முழு நேரக் கல்வியிலோ ஈடுபட்டிருக்கக் கூடாது. இருப்பினும், திறந்தவெளிப் பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி அல்லது ஆன்லைன் மூலம் படிப்பவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன கல்வித் தகுதி?
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளமோ சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் பி.ஏ, பி.எஸ்சி, பி.காம் போன்ற கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் இத்திட்டத்திற்கு முழுத் தகுதியானவர்கள். எனினும், ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்கும், சிஏ போன்ற தொழில்முறை தகுதி பெற்றவர்களுக்கும் இதில் அனுமதி இல்லை.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
முக்கியமாக, குடும்பத்தில் யாரேனும் அரசு ஊழியராக இருந்தாலோ அல்லது வருமான வரி செலுத்துபவராக இருந்தாலோ அவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.
உதவித்தொகைவிவரங்கள்
தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு சரியாக 12 மாதங்கள் முன்னணி நிறுவனங்களில் நேரடி செய்முறைப் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சி காலத்தில் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதில் 4,500 ரூபாயை மத்திய அரசு பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பிவிடும்.
மீதமுள்ள 500 ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது சொந்த நிதியில் இருந்து மாணவர்களுக்கு வழங்கும். இதுமட்டுமின்றி, இன்டர்ன்ஷிப் தொடங்கும் போது இதர அடிப்படைச் செலவுகளுக்காக ஒருமுறை மானியமாக 6,000 ரூபாயும் கூடுதலாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதுஎப்படி?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியான இளைஞர்கள் மத்திய அரசின் 'pminternship.mca.gov.in' என்ற அதிகாரப்பூர்வ பிரத்யேக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க எவ்வித பதிவுக் கட்டணமும் கிடையாது. முதலில் டிஜிலாக்கர் அல்லது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இ கேஒய்சி மூலம் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் கல்வித்தகுதி உள்ளிட்ட சுய விவரங்களை உள்ளீடு செய்தவுடன், இணையதளத்திலேயே உங்களுக்கான ரெஸ்யூம் தானாகவே உருவாக்கப்படும். அதன்பின்பு, உங்களுக்கு விருப்பமான துறை, மாவட்டம் மற்றும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தை வெற்றிகரமாக சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
