பிசிக்ஸ் வாலா என்று அழைக்கப்படும் எட் கார்ன் அலக் பாண்டே, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானை மிஞ்சி, ரூ.14,510 கோடி சொத்துகளுடன் சாதனை படைத்துள்ளார்.

Continues below advertisement


பிசிக்ஸ் வாலா நிறுவனர் அலக் பாண்டே, இந்த ஆண்டு இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை மிஞ்சி, ரூ.14,510 கோடி நிகர மதிப்புடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவரது சொத்து மதிப்பு மொத்தம் 223% உயர்ந்துள்ளது. ஷாருக்கானின் நிகர மதிப்பு ரூ.12,490 கோடியாக உள்ளது.


பிசிக்ஸ் வாலா நிறுவனம் அபரிமிதமான நிதி ஆதாயங்களையும், விரைவான வளர்ச்சியையும் கண்டுள்ளது. நிறுவனத்தின் நிகர இழப்பு முந்தைய ஆண்டில் ரூ.1,131 கோடியாக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு நிதியாண்டில் ரூ.243 கோடியாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், வருவாய் ரூ.1,940 கோடியில் இருந்து ரூ.2,886 கோடியாக உயர்ந்துள்ளது.


பில்லியனர்கள் கிளப்பில் ஷாருக்கான்


ஷாருக்கான் முதன்முறையாக பில்லியனர்கள் கிளப்பில் இணைந்தது பேசுபொருளானது. அவரது சொத்து மதிப்பு 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் 71% அதிகரித்துள்ளது.


அவரது மனைவி கௌரி கானுடன் இணைந்து நிறுவிய ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் 2023ஆம் ஆண்டில் ரூ.85 கோடி நிகர லாபம் ஈட்டியது. மேலும், அவரது பிளாக் பஸ்டர் படமான ’’ஜவான்’’ உள்நாட்டில் ரூ.640.25 கோடியும், உலகளவில் ரூ.1,160 கோடியும் வசூலித்து, அவரது ஒட்டுமொத்த நிகர மதிப்பை உயர்த்தியது.


பிசிக்ஸ் வாலாவின் ஐபிஓ திட்டங்கள்


பிசிக்ஸ் வாலா நிறுவனம் ரூ.3,820 கோடி மதிப்பிலான ஐபிஓவிற்கான (IPO) புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை செபியிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த ஐபிஓவில் ரூ.3,100 கோடி புதிய பங்குகள் மற்றும் ரூ.720 கோடி விற்பனைக்கான சலுகை (OFS) ஆகியவை அடங்கும். இதில் நிறுவனர்கள் அலக் பாண்டே மற்றும் பிரதீக் மகேஸ்வரி ரூ.360 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளனர்.


யூடியூப் ஆசிரியரில் இருந்து யூனிகார்ன் நிறுவனர் வரை


1991-ல் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக் ராஜ் பகுதியில், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் அலக் பாண்டே. சிறு வயதில் இருந்தே 6ஆம் வகுப்பு படிப்பதில் இருந்தே மாணவர்களுக்கு ட்யூஷன் எடுத்து சம்பாதிக்க ஆரம்பித்தார்.


அலக் பாண்டே 2016ஆம் ஆண்டில் ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி யூடியூபில் கற்பிக்கத் தொடங்கினார். 2020ஆம் ஆண்டு கல்வி தொழில்நுட்ப நிறுவனமாக அதை மாற்றினார். இன்று, அவர் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்முனைவோரில் ஒருவர். ஆன்லைன் ஆசிரியராக இருந்து பில்லியன் டாலர் கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனராக அவரது பயணம் உயர்ந்துள்ளது.