Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!

Part time teachers Protest: இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது, அப்போது எங்கள் போராட்டத்தை ஆதரித்து பேசிய திமுகவின் ஆட்சி.

Continues below advertisement

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடங்கிய நிலையில், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்கின்றனர். போராட்டத்தில் 6,500-க்கும் மேற்பட்டோர் இதுவரை கலந்துகொண்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு, வருகின்றனர்.

Continues below advertisement

இதுகுறித்து ஏபிபி நாடுவிடம் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழ.கௌதமன் கூறும்போது, ‘’சென்னை,எழும்பூர் ராஜரத்திரனம் ஸ்டேடியத்தில் ஒன்றுகூடினோம். எங்களைக் கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பல போராட்டங்களை நடத்தினோம். அப்போதெல்லாம் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் எங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு "உங்கள் கோரிக்கை நியாயமானது. உங்கள் போராட்டம் வெற்றியடைய திமுக துணை நிற்கும்" என எங்கள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள்.

போராட்டத்தை ஆதரித்து பேசிய கட்சியே இன்று கைது செய்கிறது

இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது, அப்போது எங்கள் போராட்டத்தை ஆதரித்து பேசிய திமுகவின் ஆட்சி. அன்று எங்களின் எந்த கோரிக்கையை ஆதரித்துப் பேசினார்களோ, எங்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என பேசினார்களோ அதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு திமுக ஆட்சி அனுமதி மறுத்துள்ளது.

உங்கள் ஆட்சிக்கு கரும்புள்ளி

கூட்டம் அதிகமாக வரும் என தகவல் வருகிறது. போக்குவரத்து பாதிக்கும், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் எனக் கூறி அனுமதி மறுத்துள்ளது. தமிழ்நாட்டின் தலைமை அமைச்சர், காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வரே, இந்தக் கூட்டம்தான் நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என 2021 தேர்தலில் வாக்களித்த கூட்டம், வாக்கு சேகரித்த கூட்டம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் ஆட்சியில் இந்தக் கூட்டம் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதே உங்கள் ஆட்சிக்கு கரும்புள்ளி. உங்களை வெற்றி பெற வைத்தவர்களை இன்று போராடக் கூட அனுமதி மறுக்கிறீர்கள்.

கூட்டம் அதிகமாக வரும் என காரணம் சொல்கிறீர்களே நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது நடத்திய போராட்டங்களுக்கு வந்த கூட்டத்தை விடவா? இப்போது அதிக கூட்டம் வந்துவிடப் போகிறது. சென்னை மாநகருக்குள் அரசியல் கட்சிகள் எதுவும் எந்த நிகழ்ச்சியும் நடத்துவதில்லையா? அதற்கெல்லாம் வராத கூட்டமா? எங்கள் போராட்டத்திற்கு வந்து விடப்போகின்றது.

கார் ரேஸ் நடத்தும்போது போராட்டம் நடத்த முடியாதா?

அரசு நினைத்தால் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையிலேயே பொதுமக்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாத வகையில் கார் ரேஸ் நடத்த முடியும்போது ஒரு சில மணி நேரங்கள் நடக்க கூடிய எங்கள் போராட்டத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என காரணம் கூறுவது ஏற்புடையதா?

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்கிறீர்களே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத்தானே காவல்துறை. நாங்கள் எல்லாம் என்ன ரவுடிகளா? நாங்கள் ஆசிரியர்கள் அல்லவா? சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படும் வகையில் நாங்கள் நடந்து கொள்வோமா?

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் எங்கள் போராட்டம் குறித்த செய்தியை சொன்னபோது போராடுவது உங்கள் உரிமை என்றாரே, அந்த உரிமையைப் பறிப்பது சரியா?

நீங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதைத்தானே செய்யுங்கள் எனக் கேட்கிறோம். அதை கேட்க கூட உரிமை இல்லையா? ஸ்டாலின் என்ற பெயர் கொண்ட பகுதிநேர ஆசிரியர் எதிர்க்கட்சித் தலைவரான உங்களிடம் கோரிக்கை வைத்த போது "இந்த ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர் ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேறும்" என்றீர்களே.. நீங்கள் சொன்னதை நினைவுபடுத்துவது தவறா? அதற்குக்கூட எங்களுக்கு உரிமை இல்லையா?

எதிர்க்கட்சியாய் இருக்கும் போது ஆதரவு ஆளுங்கட்சியாய் இருக்கும்போது அடக்குமுறையா?  இதுதான் திராவிட மாடலா?’’ என்று கௌதமன் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola