பகுதி நேர ஆசிரியர்கள், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, இன்று (ஜூலை 14) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வித் துறை வளாகம் (டிபிஐ) முன்பு சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம்

’’பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். 

எனினும் அனுமதி இல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி காவல் துறையினர் ஆசிரியர்களைக் கைது செய்தனர். இவற்றைப் படம்பிடித்த ஊடகவியலாளர்கள் மீதும் காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

வாக்குறுதி அளித்த திமுக

ஆட்சிக்கு வரும் முன்பு, பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும், வேலை நிரந்தரம் ஆக்கப்படும், 3 லட்சம் அரசுப் பணி காலி இடங்கள் நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, திமுக அளித்து இருந்தது. 

முந்தைய ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அப்போது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், ஆசிரியர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து இருந்தார்.  

இவை அனைத்தையும் குறிப்பிட்டு, ஆசிரியர்கள் அவ்வப்போது, சில மாத இடைவெளிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறே இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.