தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஜனவரி 12ஆம் தேதி 25ஆயிரம் மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணியை நடத்த உள்ளனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மாணவ சங்கங்கள் இந்தப் பேரணியை நடத்துகின்றன.
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி கட்சி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகளின் மாணவர் அமைப்புகள் தற்போது ஒன்றாக இணைந்து, United Students of India என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.
நாட்டில் செயல்பட்டு வரும் 16 மாணவர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து, மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட்டத்தை அறிவித்தது. இதுதொடர்பாக டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூட்டமும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
‘கல்வியைக் காப்பாற்ற தேசிய கல்விக் கொள்கையை நிராகரியுங்கள்; இந்தியாவைக் காப்பாற்ற, பாஜகவை நிராகரியுங்கள்’ (Save Education, Reject NEP; Save India, Reject BJP) என்ற முழக்கத்துடன் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஜனவரி 12ஆம் தேதி டெல்லியில் மாபெரும் மாணவர் பேரணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து திமுக மாணவர் அணிச் செயலாளரும் எம்எல்ஏவுமான சிவிஎம்பி எழிலரசன் கூறும்போது, “Save EDUCATION - Reject NEP; Save INDIA - Reject BJP” என்ற முழக்கத்துடன், வரும் 12.01.2024 தேதியன்று, தலைநகர் டெல்லியில் 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் நாடாளுமன்றம் நோக்கிய மாபெரும் மாணவர் பேரணி (Parliament March) நடத்திட யுனெடெட் ஸ்டூடென்ஸ் ஆஃப் இந்தியா (United Students of India) கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
தொடர்ந்து அதே கருத்தை பரப்புரை செய்யும் வகையில் சென்னையில் 2024, பிப்ரவரி 1-ம் தேதியன்றும் மாபெரும் பேரணியை நடத்தவும் “United Students of India” கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (ஜன.10) சென்னையில் நடைபெற உள்ளது.
முன்னதாக, இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 16 மாணவர் சங்கங்களின் தலைவர்கள், ’’கல்வி இல்லையென்றால் ஜனநாயகம் வலுவிழக்கும். ஜனநாயகம் வலுவிழந்தால் நமது சுதந்திரம் வலுவிழக்கும் என்ற காரணத்தால் கல்வி உரிமையை பாதுகாக்கும் நோக்கத்தோடு; கல்வியை வணிகமயமாக்கும், காவிமயமாக்கும், அனைவருக்குமான சமவாய்ப்பை மறுக்கும், குலக்கல்வித் திட்டத்திற்கு வழிவகுக்கும், இருமொழிக் கல்வி கொள்கையை இருட்டடிப்பு செய்யும்,சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி, இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து ஒற்றைப் பண்பாட்டு தேசமாக அதிலும் குறிப்பாக சமஸ்கிருத பண்பாட்டுத் தேசமாக இந்தியாவை கட்டமைக்க வழிவகுக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நிராகரிப்போம்’’ என்று கோரிக்கை விடுத்தது நினைவுகூரத் தக்கது.