கல்வி நிலை உயரும்போது பள்ளிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகச் சரிவதாகவும், சுமார் 73 சதவீத மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை முடிப்பதற்கு முன்பே படிப்பை பாதியிலேயே நிறுத்துவதாகவும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் (2026-27) பத்தாவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பள்ளிகள் மற்றும் மாணவர் சேர்க்கை சரிவு

UDISE 2024-25 தரவுகளின்படி, அரசு மற்றும் நிதியுதவி பெறும் 10,92,671 பள்ளிகளில், பெரும்பான்மையாக 9,11,032 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. ஆனால், நடுநிலைப் பள்ளிகள் 4,12,805 ஆகவும், உயர்நிலைப் பள்ளிகள் 1,61,808 ஆகவும் குறைந்து, மேல்நிலைப் பள்ளிகள் வெறும் 90,866 ஆக மட்டுமே உள்ளன.

Continues below advertisement

இதேபோல், மாணவர் சேர்க்கையும் தொடக்க வகுப்புகளில் 6.18 கோடியாக (6,18,45,033) இருந்து, நடுநிலைப் பள்ளிகளில் 4.08 கோடியாகக் குறைகிறது. இது உயர்நிலையில் 2.36 கோடியாகவும், மேல்நிலைக் கல்வியில் 1.64 கோடியாகவும் சரிவடைகிறது.

கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தவும், இடைநிறுத்தத்தைக் குறைக்கவும் கல்வி அமைச்சகம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என இக்குழு வலியுறுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு குறைபாடு

நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு இல்லை என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மொத்தமுள்ள 14.71 லட்சம் பள்ளிகளில் 5.23 லட்சம் பள்ளிகளில் மட்டுமே சிறப்பு கழிப்பறைகளும், 8.08 லட்சம் பள்ளிகளில் மட்டுமே சாய்வுதளங்களும் உள்ளன.

நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை 2024- 25ஆம் ஆண்டில், 186 சிறப்பு கழிப்பறைகள் கட்ட ரூ.482 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில், ரூ.2.60 லட்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித கட்டமைப்பு முன்னேற்றமும் இல்லை. இதேபோல், சிறப்பு ஆசிரியர்களுக்கான நிதியில் ரூ.962 லட்சம் ஒதுக்கப்பட்டதில் ரூ.80.50 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. புதிய சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதிலும் மிகக் குறைந்த அளவிலான முன்னேற்றமே காணப்பட்டுள்ளது.

குழுவின் பரிந்துரைகள்


மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் வழங்கும் 18 வயது வரையிலான இலவச கல்வி மற்றும் தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்தும் நிராகரிப்பு இல்லாத கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் கல்வி அமைச்சகம் செயல்படுகிறது. இருப்பினும், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியைத் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பாதுகாப்பான உள்கட்டமைப்பை விரைந்து உருவாக்குவதுடன், நாடு முழுவதும் சிறப்பு ஆசிரியர்களின் தேவையைக் கணக்கிட்டு உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.