Pariksha Pe Charcha: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை: வாழ்க்கையில் வெற்றி பெற சமநிலையின் ரகசியம்!
Pariksha Pe Charcha 2026: "வாழ்க்கையில் சமநிலை மிக அவசியம்"- 'பரிக்ஷா பே சர்ச்சா 2026' நிகழ்ச்சியில் மாணவர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை!

பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் வருடாந்திர நிகழ்ச்சியான பரிக்ஷா பே சர்ச்சா 2026-ஆம் ஆண்டிற்கான 9-வது பதிப்பு இன்று நடைபெற்று முடிந்தது. நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஐந்து இடங்களில் லைவ் நிகழ்ச்சிகள்
இந்த முறை மாணவர்களுடனான இந்தக் கலந்துரையாடல், வழக்கத்திற்கு மாறாக நாடு முழுவதிலும் இருந்துஒருங்கிணைக்கப்பட்டது. குஜராத்தின் தேவ்மோக்ரா, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், சத்தீஸ்கரின் ராய்ப்பூர், அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி மற்றும் டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான '7, லோக் கல்யாண் மார்க்' ஆகிய ஐந்து இடங்களில் இருந்து நடைபெற்றன.
பிரமிக்க வைக்கும் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தை, இதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையே பறைசாற்றுகிறது. மொத்தம் 4 கோடியே 50 லட்சத்து 13 ஆயிரத்து 379 பேர் இந்நிகழ்ச்சிக்காகப் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 4 கோடியே 19 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், சுமார் 24 லட்சத்து 84 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் 6 லட்சத்து 15 ஆயிரம் பெற்றோர்கள் அடங்குவர். இந்நிகழ்ச்சி தூர்தர்ஷன் மற்றும் யூடியூப் சேனல்கள் மட்டுமின்றி, அமேசான் பிரைம், ஜியோ, ஜீ 5, சோனி லிவ் போன்ற ஓடிடி தளங்களிலும், ஸ்பாட்டிஃபை ஆடியோ தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
பிரதமர் பேசியது என்ன?
மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, வாழ்க்கையில் சமநிலையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
"உணவா அல்லது தூக்கமா? படிப்பதா அல்லது விளையாடுவதா? என்று நாம் அடிக்கடி குழம்புகிறோம். இவை அனைத்திற்கும் ஒரே பதில் சமநிலைதான். வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஒரு சமநிலை தேவை. நீங்கள் ஒரு பக்கமாக அதிகப்படியாகச் சாய்ந்தால், கீழே விழ நேரிடும். ஆனால், சரியான சமநிலையைப் பேணினால், நீங்கள் ஒருபோதும் தடுமாற மாட்டீர்கள். இது எளிமையானது, ஆனால் மிகவும் சக்திவாய்ந்த உண்மை" என்று பிரதமர் பேசினார்.
பொழுதுபோக்குகள் குறித்து…
மற்றொரு மாணவர் பொழுதுபோக்குகளை வேலையாக அல்லது பயனுள்ளதாக மாற்றுவது குறித்துக் கேட்டார். அதற்குப் பதிலளித்த பிரதமர், "உங்கள் பொழுதுபோக்குகளை வெறும் நேரம் கடத்தலாகப் பார்க்காமல், அவற்றை நடைமுறைக்கு உகந்த, பயனுள்ள செயல்களாக மாற்றிக் காட்ட வேண்டும். அது பயனுள்ளது என்பதை நிரூபித்தால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்வார்கள்" என்று ஊக்கப்படுத்தினார்.
தேர்வு நேர அழுத்தத்தைக் கையாள்வது குறித்தும், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் பிரதமர் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
























