பொதுத் தேர்வுகள் நெருங்கிவிட்டாலே மாணவர்களிடம் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். அந்தப் பதற்றத்தைப் போக்கி, மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் வருடாந்திர நிகழ்ச்சியான பரீட்சா பே சர்ச்சாவின் (Pariksha Pe Charcha) 9-வது பதிப்பு விரைவில் நடைபெற உள்ளது.
வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
நேரலை ஒளிபரப்பு
இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷன் சேனல்களான டிடி நேஷனல், டிடி நியூஸ், டிடி இந்தியா மற்றும் முக்கிய தனியார் தொலைக்காட்சிகள் நேரலை செய்ய உள்ளன. மேலும், அகில இந்திய வானொலியிலும், பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் இணைய தளங்களிலும் இது நேரடியாக ஒளிபரப்பப்படும்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்
இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி நேரடியாகக் கலந்துரையாடுவார். தேர்வு பயம், மன அழுத்தம், தேர்வுக்குத் தயாராகும் உத்திகள் மற்றும் உடல்நலம் பேணுதல் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்குப் பிரதமர் பதிலளித்து, அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்குவார்.
4 கோடி பேர் பதிவு
இந்த ஆண்டுக்கான முன்பதிவில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, 4 கோடிக்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பரீட்சா பே சர்ச்சாவில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் முக்கியக் கருப்பொருள்கள்
- தேர்வுகளைத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்
- சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு
- சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்
- தூய்மையான இந்தியா
2018-ம் ஆண்டு டெல்லியில் உள்ள டல்கடோரா மைதானத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இம்முறையும் தேர்வுகள் குறித்த பயத்தைப் போக்கப் பிரதமரின் உரை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.