பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள், பரிக்ஷா பே சார்ச்சா என்ற பெயரில் வழங்கப்படும் பிரதமர் மோடியின் தன்னம்பிக்கை உரையை தமிழில் கேட்கலாம்.
2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். இந்த முறை 6-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
9 - 12ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ளலாம்
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாணவர்கள், mygov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.
சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு
பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. 1921 என்ற சிறப்பு தொலைபேசி எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டது.
38.8 லட்சம் பேர் முன்பதிவு
கடந்த ஆண்டைக் காண்டிலும் இரண்டு மடங்கு மாணவர்கள் நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்துள்ளதாக, மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருந்தார். 2022ஆம் ஆண்டு 15.73 லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்த நிலையில், 38.8 லட்சம் மாணவர்கள் இந்த முறை அதாவது 2023ஆம் ஆண்டு முன் பதிவு செய்தனர். இதில் மாணவர்களின் எண்ணிக்கை 31.24 லட்சம் பேர் ஆகும். ஆசிரியர்கள் 5.60 லட்சம் பேர் ஆவர். பெற்றோர்கள் 1.95 லட்சம் பேர் பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியைக் காண முன்பதிவு செய்திருந்தனர்.
2018ஆம் ஆண்டு முதல்முறையாக பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது 22,000 மாணவர்கள் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். இந்த முறை தமிழகத்தில் இருந்து சுமார் 10 லட்சம் மாணவர்கள், பிரதமர் உடனான நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழில் பிரதமர் உரையைக் கேட்பது எப்படி?
* பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கமான https://www.youtube.com/@NarendraModi என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* இப்போது Playlist பொத்தானை க்ளிக் செய்ய வேண்டும்.
* PPC 23 என்ற பக்கத்தில் பிராந்திய மொழிகளில் ஒன்றான தமிழைத் தேர்வு செய்யவும்.
* அல்லது எளிதாக, https://www.youtube.com/watch?v=MrbvjzUgsts&list=PLBG6UuYpOcTuLNtjOJbECErr--_6y2K5b என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.
டெல்லியில் உள்ள டல்ஹோத்ரா உள் அரங்கத்தில் பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.